இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்

தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம், எதிர் நீச்சலடித்து உழைக்க ஊனம் தடையல்ல என மாற்றுத் திறனாளிகள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.
 தொழிலாளி ஜே.அருண்:

 

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் கவலை கிடையாது என்கிறார் செங்குன்றத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஜே.அருண்(42). இவர் யாரையும் எதிர்பார்க்காமல் தனது பெட்டிக் கடையில் சில்லறை பொருள்கள் விற்பனை, செல்லிடப்பேசி ரீசார்ஜ் செய்து மாதம் ரூ. 3 ஆயிரம் வருவாய் ஈட்டி வருகிறார். அத்துடன், நாற்காலி பின்னுதல் போன்றவை மூலம் கூடுதலாக ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ரூ. 5 ஆயிரம் சம்பாதிக்கிறார். மேலும், தனது தனித்திறமையால் நிகழாண்டில் மதுராந்தகத்தில் நடந்த தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான போபியோ விளையாட்டுப் போட்டியில் வென்று சுழற்கோப்பை பெற்றுள்ளார்.

 

இது குறித்து அவர் கூறியது: என்னைப் பொறுத்தவரையில் கால்கள் ஊனமாகப் பிறந்தாயிற்று. இதற்காக பிறப்பை எண்ணி கவலையடைந்ததும் இல்லை, வீணே முடங்கியும் விடவில்லை. நம்மால் முடிந்த அளவு உழைக்க வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தக் கூடாது என்ற உறுதியோடு வாழ்கிறேன். இதை என்னைப் போன்றவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் செங்குன்றம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளை இணைத்து, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுச் சங்கத்தையும் நடத்துகிறேன். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு முடிந்த அளவுக்கு சலுகைகளை பெற்றுத் தருகிறேன். அத்துடன் யாரையும் சார்ந்து இருக்காத வகையில் கைத்தொழில் கற்றுக் கொள்ளவும் வழிவகை செய்து வருகிறேன். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான போபியோ விளையாட்டுப் போட்டியில் பயிற்சி பெறுவதற்கு அதற்கான பந்து இல்லை. இந்த விளையாட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே பந்து விளையாடுதல் ஆகும். இப்பயிற்சியைப் பெற அரிமா சங்கத்தில் அனுமதி அளித்துள்ளனர். ஆனால், இதற்கான பந்தின் மதிப்பு ரூ. 20 ஆயிரம் ஆகும். இதற்காக மக்களவை உறுப்பினர் வேணுகோபாலிடம் உதவிக்காக அணுகியபோது உதவி செய்வதாக கூறினார். இப்பந்து மூலம் தொடர்ந்து பயிற்சி பெற்றால் எளிதாக வெற்றி பெறமுடியும் என்றார். (News from www.dinamani.com)

error: Content is protected !!