காச நோய்க்கு அம்மா, மக்கள் மருந்தகங்களில் இலவசமாக மருந்துகள் வாங்கலாம்

குமரி மாவட்டத்தில் அம்மா மற்றும் மக்கள் மருந்தகங்களில் காசநோய்க்கு இலவசமாக மருந்துகள் கிடைக்கும் என்றார் குமரி மாவட்ட காசநோய் தடுப்பு துணை  இயக்குநர் டாக்டர்.வி.பி.துரை.

 நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்மா மற்றும் மக்கள் மருந்தக மருந்தாளுநர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது;  இந்தியாவில் ஆண்டுக்கு 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு,  சுமார் நான்கரை லட்சம் பேர் சரியான சிகிச்சையின்றி இறந்து  விடுகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சுமார் ஆயிரத்து 500 நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். இதே அளவு நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.  காசநோய் சிகிச்சையானது 6 முதல் 9 மாதங்கள் வரை நீடிக்கும். இதற்கு பெரும் தொகை செலவாகும். பெரும்பாலான நடுத்தர குடும்பங்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து காசநோய் சிகிச்சை எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள். இதனைப் போக்கும் வகையில் அம்மா  மற்றும் மக்கள் மற்றும் கூட்டுறவு  மருந்தகங்களில் காசநோய் மாத்திரைகள் இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் காசநோய் தடுப்பு மருத்துவர் முத்துகுமார்,   மருந்தாளுநர்கள் ராமச்சந்திரன், பால்ராஜ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!