கோடியக்கரை சரணாலயத்திற்கு மீண்டும் திரும்பும் பறவைகள்!

கஜா புயலால் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திலிருந்து விலகிச் சென்ற பறவைகள் மீண்டும் அங்கு திரும்பத் தொடங்கியுள்ளன.

கஜாவின் கோரத்தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை விலங்குகள் சரணாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோடியக்கரை சரணாலயத்தில் வசிக்கும் மான்கள், குதிரைகள், வெளிநாட்டு பறவைகள், காட்டுப்பன்றி, மாடுகள் என பல விலங்கினங்களும் அதிக அளவில் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. உயிரிழந்த விலங்குகள் காரைக்காலையடுத்த பட்டினச்சேரி முதல் வாஞ்சூர் வரையிலான கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கின.

இந்நிலையில் கஜா புயல் கரையைக் கடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், சரணாலயத்திலிருந்து விலகிச் சென்ற பறவைகள் மீண்டும் கோடியக்கரைக்கு திரும்பத் தொடங்கியுள்ளன. கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ரஷ்யா அர்டிக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பறவைகள் வந்து செல்வது வழக்கம். இம்முறை கஜா புயல் பாதிப்பு காரணமாக சரணாலயத்தில் பறவைகள் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் சரணாலயத்திற்கு பறவைகள் திரும்பத் தொடங்கியுள்ளன. சுமார் 2000 பிளெமிங்கோ பறவைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளான் பறவைகளும் சரணாலயத்தில் காணப்படுகின்றன். இந்த சரணாலயத்தை பார்வையிட்ட மும்பை இயற்கை வரலாற்று கழகத்தின் இணை இயக்குநர் பாலசந்திரன், பறவைகள் ஒரு வாரத்திற்குள் முழுமையாக திரும்பும் என தெரிவித்தார். கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிட்டதாகவும், அங்கு மான்கள் அதிக அளவில் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!