சிறப்பு வகுப்பில் பங்கேற்காத பிளஸ் 2 மாணவர்கள்

தேனி: சிறப்பு வகுப்புகளில் ஆர்வம் காட்டாத பிளஸ் 2 மாணவர்களால் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் குறையுமோ என தலைமை ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டை விட அதிகரிக்க வேண்டும் என கல்வித்துறை பள்ளிகளை வலியுறுத்தி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்., பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி தேர்வுக்கு முழுமையாக தயார் செய்து வருகின்றன. அதுபோல அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முழுவீச்சில் முயற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் ஆசிரியர்களின் முயற்சிக்கு மலைப்பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் போதிய ஒத்துழைப்பு கிடைப்பது இல்லை. குறிப்பாக கடமலைக்குண்டு, குமணன் தொழு, வருஷநாடு, முருக்கோடை, வாய்கால்பாறை ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவது திருப்திகரமாக இல்லை.

இதனால் மாதிரி தேர்விற்கு பின் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர். இவ்வகுப்புகளுக்கு பிளஸ் 2 மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வராமல் “ஆப்சென்ட்&’ ஆகினர். மாணவிகள் ஆர்வமாக வந்து படித்தனர். சில மாணவர்கள் பள்ளிக்கு வராமல் பெற்றோர் அனுமதியுடன் வேலைக்கு செல்வதாக கூறினர். ஒரு சிலர் பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்புகளை “கட்&’ அடித்து விட்டனர். பொது தேர்வு கால அட்டவணை வெளியான பிறகும் மாணவர்களிடம் படிப்பின் மீது ஆர்வமின்மை அறிந்து தலைமை ஆசிரியர்கள் கவலைக்குள்ளாகி உள்ளனர்.

அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்தால் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது கல்வி துறை நடவடிக்கை பாயும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். இதுபோன்ற பள்ளிகளில் பெற்றோர்,மாணவர் கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்கினால் ஓரளவிற்கு மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். தேர்ச்சி சதவீதமும் அதிகரிக்கும் என தலைமை ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

error: Content is protected !!