நவ.25-க்குள் நீட் பதிவை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பதிவுகளை நவ.25-ஆம் தேதிக்குள் முடிக்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 412 மையங்களில் நேரடி வகுப்பு, விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்கிடையில், நீட் தேர்வுக்கான ஆன்லைன் பதிவை கடந்த நவ. 1-ஆம் தேதி தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. தொடங்கியது.
இதில், விண்ணப்பிப்பது தொடர்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என பள்ளிக் கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் விண்ணப்பத்தை, தலைமை ஆசிரியர்களே பதிவு செய்து தர பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவை பின்பற்றி நவ.25-ஆம் தேதிக்குள் நீட் பதிவு பணிகளை முடித்து மாணவர்கள் பட்டியலை ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். (Thinamani News)

error: Content is protected !!