பள்ளிகளில் ஆண்டுவிழா; அனைவருக்கும் கல்வியில் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில், சென்னையை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த, பள்ளி ஆண்டு விழாவும், அதில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளும் முக்கிய பங்கு வகிக்கும். அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்,பெரும்பாலானவற்றில், நிதி பிரச்சனை காரணமாக ஆண்டு விழா நடத்துவதில்லை. இந்நிலையில்,அனைவருக்கும் கல்வி திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 மாணவர்களுக்கு மேல் உள்ள துவக்கப்பள்ளிகளுக்கு, 5,000 ரூபாயும், 150 மாணவர்களுக்கு மேல் உள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு, 6,000ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

இதில், மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகளும், கட்டாயக்கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் இடம் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இந்த உத்தரவிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!