விபத்தில் மூளைச்சாவு அடைந்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த அரசுப்பள்ளி மாணவன் – உருவப்படத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் அஞ்சலி மாணவிகள் கண்ணீர் விட்டு கதறல்

விபத்தில் மூளைச்சாவு அடைந்து 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த அரசுப்பள்ளி மாணவன் அவினாஷின் உருவப்படத்திற்கு பள்ளியில் ஆசிரிய–ஆசிரியைகள் மற்றும் மாணவ–மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். அப்போது மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

விபத்தில் மூளைச்சாவு

நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவருடைய மனைவி லதா. இவர்களது மகன் அவினாஷ் (வயது 12).
நாகர்கோவில் கோட்டார் ஏழகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அவினாஷ் 7–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைக்கு சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மோதியது. இந்த விபத்தில் சுயநினைவிழந்த அவினாஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். ஆனால் மாணவன் மூளைச்சாவு அடைந்ததால் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனால் மாணவனை உயிர் பிழைக்க வைக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களால் கைவிரிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக அவரது பெற்றோர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவினாஷ் இதயம், சிறுநீரகங்கள் போன்றவை தொடர்ந்து இயங்கி வந்ததால், மகனை இழந்தாலும் அவனது உடல் உறுப்புகளாவது வேறு சிலர் மூலம் உயிர் வாழட்டும் என்று எண்ணிய அவரது பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
தகனம்
இதனைத்தொடர்ந்து சிறப்பு மருத்துவர் குழு அமைக்கப்பட்டு அதே மருத்துவமனையில் மாணவனின் இதயம், 2 சிறுநீரகங்கள், கல்லீரல், 2 கண்கள் ஆகிய உறுப்புகள் அவினாஷ் உடலில் இருந்து அகற்றப்பட்டன. இதில் இதயம் சிறப்பு ஆம்புலன்சு மூலம் போலீஸ் பாதுகாப்போடு நெல்லையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு மற்றொருவருக்கு பொருத்தப்பட்டது.
இதேபோல் சிறுநீரகம் ஒன்று மதுரைக்கும், கல்லீரல் திருச்சிக்கும் கொண்டு செல்லப்பட்டன.
மற்றொரு சிறுநீரகம், உறுப்புகள் தானம் பெறப்பட்ட ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு நோயாளிக்கு வழங்கப்பட்டது. 2 கண்கள் நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவன் அவினாஷின் உடல் ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட அவினாஷின் உடலுக்கு அந்த பகுதி மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அஞ்சலி
இந்தநிலையில் அவினாஷ் படித்த அரசு பள்ளியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதையொட்டி பள்ளி மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவினாஷின் உருவப்படத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை கலாதேவி, ஆசிரிய–ஆசிரியைகள், மாணவ–மாணவிகள் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அவினாஷின் ஆத்மா சாந்தி அடைய ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது அஞ்சலி செலுத்திய ஒரு மாணவி திடீரென மயங்கி விழுந்தார். உடனே ஆசிரியர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர். சில மாணவ–மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. ஆறுதல்
இந்தநிலையில் நேற்று காலை மாணவன் அவினாஷ் வீட்டுக்கு நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் சென்றார். அங்கு அவினாஷின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது வக்கீல் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு மற்றும் பலர் உடன் சென்றனர்.
2 பேரிடம் விசாரணை
இதற்கிடையே மாணவன் அவினாஷ் விபத்திற்கு காரணமான வாகனத்தை தேடிக்கண்டுபிடிக்கும் பணியில் நாகர்கோவில் கோட்டார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் ஒரு மோட்டார் சைக்கிள் தான் மாணவன் மீது மோதியது தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்கு இடமான 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திறமையான மாணவனை இழந்து விட்டோம்‘ பள்ளி தலைமை ஆசிரியை உருக்கம்
மாணவன் அவினாஷ் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கலாதேவி உருக்கமாக கூறியதாவது:–
எங்களது பள்ளியில் படித்து விபத்தினால் இறந்த அவினாஷ் திறமையான மாணவன். பல்வேறு திறமைகள் அவனிடம் இருந்தது. கடந்த பள்ளி ஆண்டு விழாவில் கூட அவினாஷ் நடன போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றான். அவனுக்கு மரக்கன்றுகள் நடுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு.
ஓவியம் வரைவதிலும் கைதேர்ந்த மாணவன். பாரதிதாசன், பாரதியார் போன்றோரின் ஓவியங்களை சிறப்பாக வரைவான். ஒரு புகைப்படத்தை பார்த்த ஒரு சில மணித்துளிகளில் அது போலவே வரையும் வல்லமை உடையவன். நல்ல திறமையான மாணவனை எங்களது பள்ளி இழந்து விட்டது. பள்ளி மாணவ–மாணவிகள் சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோரும் தங்களது குழந்தைகளை சாலைகளில் அழைத்து செல்லும்போது கவனமாக அழைத்துச்செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
error: Content is protected !!