வீடியோ கான்பரன்ஸ் மூலம், ஒரே நேரத்தில், 1,000பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடம் போதிக்கும் திட்டம் தமிழகத்தில், பிப்ரவரியில் கொண்டு வரப்படும்,” என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில், 9.50 லட்சம் ரூபாய் செலவில், மேல்நிலைத்தொட்டி கட்டமைப்புக்கான, பூமி பூஜையை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பிளஸ் 2 வேதியியல் பாட வினாத்தாள் வெளியாகவில்லை. சிவகங்கை மாவட்டத்தில், அதுபோன்ற நிகழ்வுகள் நடந்ததாக குறிப்பிட்டனர்.தையல் போடப்பட்டிருந்த, வினாத்தாள் பார்சல் உடைக்காமல், அறைக்குள் அப்படியே தான் இருந்துள்ளது. இது தொடர்பாக சிவகங்கை கலெக்டரும், போலீசாரும் நேரில் பார்த்து வினாத்தாள்கள் எடுத்து செல்லவில்லை என, தெரிவித்துள்ளனர். எவ்வளவு வினாத்தாள்கள் வழங்கப்பட்டதோ, அந்த எண்ணிக்கை கொண்டபார்சல் அதே இடத்தில், அப்படியேதான் இருந்தது. இது சம்பந்தமாக, அறை பூட்டை உடைத்ததாக இரு மாணவர்கள் மீது, வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை என்ற நிலை, இனி எதிர்காலத்தில் இருக்காது. தமிழகத்தைபொறுத்த வரை, புதிய வரலாற்றை படைக்கும் திட்டம்,கொண்டு வர உள்ளோம். சென்னை அண்ணா நூலகத்தில், மிக விரைவில் ஸ்டூடியோ துவங்கப்படும்.

இப்பணிகள் முடிந்ததும், மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், 1,000 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான பாடம் போதிக்கும் திட்டம் கொண்டு வர இருக்கிறோம். வழக்கமாக ஒவ்வொரு ஆசிரியரும், தங்கள் பாடவேளையில், அந்தந்த பாடங்களை மட்டுமே போதிப்பர். இனி, 1,000 பள்ளிகளிலும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான பாடம் போதிக்கப்படும். இதற்காக பாடம் வாரியாக, பட்டியலிட்டு நேரம் வகுக்கப்பட உள்ளது.

இத்திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழகத்தில் கொண்டு வருகிறோம். இத்திட்டம் முதற்கட்டமாக, பிப்ரவரி முதல் வாரத்தில், முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்

error: Content is protected !!