இந்திய விண்வெளித் துறையில் எனது பங்களிப்பு இறுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்(77) தெரிவித்தார்.
இதுகுறித்து பிடிஐ செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “வெளிநாடுகளுக்கு ரகசியத் தகவல்களை அளித்ததாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் எனது பெயர் பிரபலமடைந்தது. எனினும், தற்போது எனது பங்களிப்பை அரசு அங்கீகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.
பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தில் நம்பி நாராயணன் திறம்பட செயல்பட்டவர். எனினும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக கடந்த 1994-ஆம் ஆண்டில் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மாலத்தீவு பெண்கள் இருவர், மற்றொரு விஞ்ஞானி உள்ளிட்டோரும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக கேரள காவல்துறை விசாரணை நடத்தியது. பின்னர் சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. அதில், நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு எதிரான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டு மாத சிறைவாசத்துக்கு பின் நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டார். மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாக நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து அவருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் பாராட்டு: பத்ம பூஷண் விருது பெற்ற நம்பி நாராயணனுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் மாதவன் நாயர் மற்றும் ஏ.எஸ். கிரண் குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மாதவன் நாயர் கூறுகையில், “பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் தயாரிப்பில் நம்பி நாராயணனின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கேரள காவல் துறையினரால் நம்பி நாராயணன் மிகவும் துன்புற்றார். தற்போது அவரது பங்களிப்பை அரசு அங்கீகரித்துள்ளதில் மகிழ்ச்சி’ என்றார்.
கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தில் நிபுணராக விளங்கியவர் நாராயணன் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் பாராட்டினார்.

error: Content is protected !!