இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிஸ் பேனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.

முதல் போட்டியில் ரன்களை வழங்கிய இந்திய பந்துவீச்சாளர்கள் 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினர். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை அந்த வாய்ப்பை பறித்துவிட்டது. இதனால் தொடரை வெல்ல வாய்ப்பில்லை. சமன் செய்வதற்கான வாய்ப்பிருப்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள். பொதுவாக சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என்பதால் 3-வது சுழற்பந்து வீச்சாளராக சேஹல் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த ஆஸ்திரேலிய அணிக்கு, இந்த தொடரின் முதல் போட்டியில் பெற்ற வெற்றி, நம்பிக்கை அளித்திருக்கும். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடரை வெல்லும் என்பதால் அதற்கான முனைப்பில் ஈடுபடும்.

பயிற்சியின் போது காயமடைந்த அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டான்லேக்குக்கு பதிலாக ஸ்டார்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக 2016-ம் ஆண்டில்தான் சர்வதேச டி 20 போட்டியில் ஆடியிருந்தார். சிட்னி வானிலை தெளிவாக இருப்பதால் இன்று மழை யால் ஆபத்து இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. சிட்னியில் 2016-ம் ஆண்டு நடந்த டி20 போட்டியில், ஆஸ்திரேலியா 198 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணிக்கு. அதை எட்டி இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

போட்டி இந்திய நேரப்படி 1.20 மணிக்கு தொடங்குகிறது.

error: Content is protected !!