வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதால் டிச.15, 16 தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமானது முதல் மிக கனமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல்பகுதியில் நிலவிவந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி  இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள இந்தியப்பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது.

இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது டிச.14 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஆந்திரா வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக வரும் 15, 16 தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மீனவர்கள் 12-ம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், டிச. 13 தெற்கு வங்கக்கடலின் மத்திப்பகுதிகளுக்கும், 14-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், டிச-15-ம் தேதி தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறது.

error: Content is protected !!