கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் பண்ணை சுற்றுலாத் திட்டத்தை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, அங்கு 2 கி.மீ. தொலைவுக்கு மாட்டுவண்டி ஓட்டினார்.
கன்னியாகுமரி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் 31.76 ஏக்கர் பரப்பளவில் பழப் பண்ணை தொடங்கப்பட்டது. இங்கு மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பழ வகைகளும், அலங்கார செடிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பழத்தோட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்கா தொடங்கப்பட்டது. மேலும், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களைக் கவரும் வகையில் பண்ணை சுற்றுலாத் திட்டம் இம்மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்த பண்ணை சுற்றுலாவில் விவசாயிகள் பசுமை பயிற்சிக் கூடம், இயற்கை வேளாண்மைத் தேவைக்கு இயற்கை உரம் தயாரிப்பு முறை, மூலிகைத் தோட்டம், மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பண்ணை சுற்றுலாத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பண்ணை சுற்றுலா அமைந்துள்ள பகுதி முழுவதும் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு அவரே மாட்டுவண்டியை (ரேக்ளா வண்டி) ஓட்டி குடும்பத்துடன் பயணம் செய்தார் .
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுச்சூழல் பூங்கா, பண்ணை சுற்றுலாத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாரம்பரியமான சில விளையாட்டுகளை இங்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. மாட்டு வண்டியில் பயணம் செய்தல், உறியடி, தூண்டில் மூலம் மீன்பிடித்தல் உள்ளட்டவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டுகளும் இங்கு கொண்டுவரப்பட உள்ளன. இதற்கு போதிய வரவேற்பு இருந்தால் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார் அவர்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, சார் ஆட்சியர்கள் ராஜகோபால் சுங்காரா, பவன்குமார் ஜி.கிரியப்பனவர், தோட்டக்கலை துணை இயக்குநர் அசோக் மேக்கரின், உதவி இயக்குநர்கள் பாலகிருஷ்ணன், ஷீலாஜான், மேலாளர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை ) குணபாலன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ஆறுமுகபெருமாள், உதவி இயக்குநர் மகாலிங்கம், பேருராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மாடசாமி சுந்தர்ராஜ், உதவிப் பொறியாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!