சென்னை :வாகனம் ஓட்டுவோர், ‘டிஜிட்டல்’ வடிவிலான ஆவணங்களை காட்டுவதற்கு, மத்திய அரசு அனுமதித்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழக கூடுதல், டி.ஜி.பி., ௨௦௧௭ ஆகஸ்ட்டில் வெளியிட்ட உத்தரவு:வாகனம் ஓட்டுவோர், அசல் உரிமம் மற்றும் ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் கேட்கும்போது, அவற்றை சமர்ப் பிக்கவில்லை என்றால், மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து, சரக்கு வாகன உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள், தனி நபர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு, நீதிபதிகள், வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, லாரி உரிமையாளர்கள் தரப்பில், வழக்கறிஞர் கோவிந்தராமன் ஆஜராகி, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணை பற்றி, நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
தன் மொபைல் போனில், அறிவிப்பாணை உள்ளதாகவும் தெரிவித்தார்.அனைத்து மாநிலங்களின், டி.ஜி.பி.,க்கள் மற்றும் அரசு செயலர்களுக்கு, அந்த அறிவிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகனங்கள் குறித்த ஆவணங்களை, எந்த அதிகாரியும் கேட்கும்போது, அசல் ஆவணமாகவோ, டிஜிட்டல் வடிவத்திலோ அளிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது.மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்திருப்பதால், இந்த வழக்கு அவசியமற்றது எனக் கூறி, விசாரணையை, நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

error: Content is protected !!