‘ஜிசாட்-29’ தகவல் தொடர்பு செயற்கைகோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதன் மூலம் இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்து உள்ளது என்று விஞ்ஞானிகள் பெருமிதம் கொண்டனர். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தகவல் தொடர்பு, கடல்சார் ஆய்வு, வானிலை பயன்பாட்டுக்கான பல்வேறு விதமான செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. தகவல்தொடர்பு மற்றும் காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக இஸ்ரோ ‘ஜிசாட்-29’ என்ற செயற்கைகோளை வடிவமைத்து இருந்தது. இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது. இது இந்தியாவின் 13-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். அதோடு நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கிரயோஜெனிக்’ என்ஜின் பொருத்தப்பட்ட 10-வது ராக்கெட்டாகும். வெற்றிகரமாக பாய்ந்தது 26 மணி 8 நிமிட நேர ‘கவுண்ட்டவுனை’ முடித்துக்கொண்டு நேற்று மாலை 5 மணி 8 நிமிடத்துக்கு ‘ஜிசாட்-29’ செயற்கைகோளை சுமந்துகொண்டு, பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது. 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-வது நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த ராக்கெட் 43.49 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. 4 டன் எடைகொண்ட செயற்கைகோளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டில், தற்போது 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் அனுப்பப்பட்டு உள்ளது. செயற்கைகோளை நிலை நிறுத்தியது ராக்கெட் புறப்பட்ட 16 நிமிடம் 43 வினாடிகளில் திட்டமிட்ட உயரத்தை (207.57 கிலோ மீட்டர்) அடைந்ததும், ‘ஜிசாட்-29’ செயற்கைகோளை வெற்றிகரமாக அதன் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், 3-வது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த ‘கிரயோஜெனிக்’ என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியதாக விஞ்ஞானிகள் கூறினார்கள். இந்தியாவில் இருந்து ஏவப்படும் அதிக எடைகொண்ட செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டதும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடியிருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களை ஆரத்தழுவி கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினர் ராக்கெட் ஏவுவதை பார்ப்பதற்காக கூடியிருந்தனர். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததும் அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தகவல் தொடர்பு இந்த செயற்கைகோளில் தகவல் தொடர்புக்கு உதவும் சக்திவாய்ந்த ‘கேயு-பேண்ட்’, ‘கேஏ-பேண்ட்’, க்யூ/வி பேண்ட் கருவிகள் மற்றும் நவீன ரக கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இவை செயல்படுவதற்கு செயற்கைகோளில் 4,600 வாட் திறன்கொண்ட 2 பேட்டரிகள், மீட்பு மற்றும் தேடும் பணிக்கான டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் நவீன கருவிகள் இடம் பெற்றுள்ளன. இதனுடைய ஆயுட்காலம் 10 ஆண்டுகள். ஜிசாட்-29 செயற்கைகோள் சுமார் ரூ.250 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இதன் மூலம், கிராம வள மையங்கள் வழியாக கிராமப்புறங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி மேம்பாடு அடையும். இந்த திட்டத்தின் மூலம் கிரயோஜெனிக் என்ஜினில் இஸ்ரோ தன்னிறைவை பெற்று உள்ளது. “கடந்த காலங்களில் அதிக எடைகொண்ட செயற்கைகோள்களை பிரெஞ்சு கயானாவில் இருந்து தான் ஏவப்பட்டு வந்தன. தற்போது நம்முடைய தொழில்நுட்பத்தில் அதிக எடைகொண்ட செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது பெருமிதமாக இருக்கிறது. வரலாற்று சாதனை படைக்கப்பட்டு உள்ளது” என்று விஞ்ஞானிகள் கூறினார்கள்.
error: Content is protected !!