திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே விவசாய நிலத்தில் புதைந்து கிடந்த 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்தின் வீரக்கல் கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை பகுதியில், ஏராளமான வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுகள், வீர நடுகற்கள் போன்றவை சமீபகாலமாக கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவண்ணாமலை அடுத்த பெருமணம் கிராமத்தில் உள்ள நத்தம்மேடு பகுதியில், விவசாய நிலத்தில் ஒரு மரத்தின் அருகே மண்ணோடு புதைந்து கிடந்த வீரக்கல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

தொல்லியல் ஆய்வாளர் சேகர், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரா.தனிஸ்லாஸ், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் தா.ம.பிரகாஷ், ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் இந்த வீரக்கல்லை ஆய்வு செய்தனர்.அப்போது, விஜயநகர பேரரசு காலமான 15ம் நூற்றாண்டை சேர்ந்த குறுநில மன்னன் அல்லது போர் வீரனின் வீரக்கல் என தெரியவந்தது. அதன் வரலாற்று தொன்மை அறியாமல், மாடு கட்டும் கல்லாக பயன்படுத்தப்பட்டு, நாளடைவில் மண்ணில் புதையுண்டு கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர் சேகர் கூறியதாவது: பெருமணம் நத்தக்கொல்லை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வீரக்கல், மூன்றரை அடி உயரமுள்ளது. அதில், வீரன் தலையில் கிரீடம், கழுத்தணிகள், கை மறறும் கால்களில் காப்பு, இடுப்பில் ஒட்டியானம், அலங்கரிக்கப்பட்ட கீழாடையுடன் வலது ஓரத்தில் அம்பும், இடக்கையில் வில்லும் வைத்து, அகோர பார்வையுடன் எதிரியை நோக்கி அம்பை எரிகின்ற தோற்றம் உள்ளது.

தலையில் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்துடன் கண்கள் பிதுங்கி நிலையில் அகோர பார்வை மற்றும் உடை, அணிகலன் அடையாளங்களை ஒப்பிட்டு பார்த்தால், இப்பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னனாகவோ போர் வீரரனாகவோ இருக்கலாம் என தெரிகிறது. வீரர்களின் நினைவாக நடுகற்கள் அமைத்து வழிபடுவது நம்முடைய முன்னோர்களின் கலாசாரம். அதன்படி, திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம் உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான வீரக்கற்கள் உள்ளன. இவற்றையெல்லாம் மீட்டெடுத்து பாதுகாப்பது கடமையாகும்.  இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!