திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு வருகை பதிவேட்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ‘ஆப்சென்ட்’ போட்டார். திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே மேல்முத்தானூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, நேற்று காலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் திடீரென சென்றார்.

அங்கு ஆய்வு நடத்தியதில், தலைமை ஆசிரியர் முருகேசன் பள்ளிக்கு வரவில்லை என தெரிந்தது. சக ஆசிரியர்களிடம் விசாரித்ததில், கடந்த நான்கு நாட்களாக பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதையடுத்து, வருகை பதிவேட்டில் தலைமை ஆசிரியருக்கு முதன்மை கல்வி அலுவலர் ‘ஆப்சென்ட்’ போட்டார். இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வருகை தந்த தகவலை அறிந்த பொதுமக்கள், நேரடியாக சென்று அவரிடம் முறையிட்டனர், அவர்கள் கூறுகையில், ‘தலைமை ஆசிரியர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே பள்ளிக்கு வரவில்லை, பாடமும் நடத்தவில்லை. எங்கள் குழந்தைகளை வேறு கிராமத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளோம்’ என்று கூறினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் கூறுகையில், ‘பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து உங்கள் குழந்தைகளை இதே பள்ளியில் படிக்க வையுங்கள்’ என்று கூறிவிட்டு சென்றார்.

error: Content is protected !!