குமரி மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டியை நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம் தொடங்கி வைத்தார்.
இந்திய தடகள சம்மேளனத்துக்கு உட்பட்ட பள்ளிகள் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு, குமரி மாவட்ட தடகள கவுன்சில் சார்பில் குமரி மாவட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.

காலையில் நடந்த தொடக்க விழாவுக்கு உயரம் தாண்டுதலில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றவரும், குமரி மாவட்ட தடகள கவுன்சில் தலைவருமான ஆறுமுகம் பிள்ளை தலைமை தாங்கினார். குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக குமரி மாவட்ட மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஸ்காட் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எட்வர்டு வாழ்த்தி பேசினார்.

பின்னர் மாணவ-மாணவிகளுக்கான போட்டிகள் தொடங்கி நடந்தது. 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 14 முதல் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டம் முழுவதிலும் இருந்து 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1000 மீ., 1500 மீ. ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

மாலையில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் வாவறை செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தடகள கவுன்சில் நிர்வாகிகள் அங்கிரி, நெல்லையப்பன், சகாய சைமல், மகேஷ் மற்றும் பலர் செய்திருந்தனர்.

error: Content is protected !!