ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில், புதிய இரும்பு பிளேட்டுகள் பொருத்திய பிறகும், பாலம் பலமின்றி இருப்பதால், ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில், நேற்று முன்தினம் இரும்பு பிளேட்டில் விரிசல் ஏற்பட்டது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய இரும்பு பிளேட் பொருத்தினர். அதன்பின், இரவு, 1:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் நிறுத்தியிருந்த இரு சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள், ராஜஸ்தான் அஜ்மீர் ரயில் பயணியர் இன்றி, பாம்பன் பாலத்தை கடந்து சென்றன. அப்போது, புதிய பிளேட் பொருத்திய இடத்தில், மீண்டும் சேதம் ஏற்பட்டது. இதனால், ராமேஸ்வரம் வரவேண்டிய ரயில்கள், மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரையில் நிறுத்தப்பட்டன. நேற்று காலை, 6:00 முதல், 11:00 மணி வரை ஊழியர்கள், புதிய பிளேட்டுகளை பொருத்தினர். பின், ரயில் இன்ஜினை, 5 கி.மீ.,வேகத்தில் மண்ட பத்தில் இருந்தும், 15 கி.மீ., வேகத்தில் பாம்பனில் இருந்தும் இயக்கி, சோதனை ஓட்டம் விடப்பட்டது.அப்போது, ஆய்வு செய்த பொறியாளர் குழுவினர், பாலத்தில் அதிர்வு ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதனால், ‘நவீன கருவிகள் மூலம் பாலத்தில் அதிர்வு, பலம் குறித்து ஆய்வு செய்த பிறகே, ரயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்’ என, பொறியாளர்கள் தெரிவித்தனர்.இந்த ஆய்வு முடியும் வரை, அனைத்து ரயில்களும் மண்டபம், ராமநாதபுரம் ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டு திரும்பிச்செல்லும். ராமேஸ்வரத்திற்கு பயணியர் சிறப்பு பஸ்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுவர். மதுரை கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் லலித்குமார் மனுஷ்கானி இதை தெரிவித்தார்.

error: Content is protected !!