குழந்தைகளில், 90 சதவீதம் பேர், உடல் பருமனாக இருக்கின்றனர். காரணம், தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது, உடற்பயிற்சி இல்லாதது தான். வீட்டின் உள்ளே இருந்தபடி, மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் விளையாடிய படி, பிஸ்கட், கேக், குளிர்பானம் போன்ற துரித, பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவர்.தேவைக்கு அதிகமாக, ‘கார்போஹைட்ரேட்’் சாப்பிடுவதால், உடல் பருமன் அதிகரித்து விடுகிறது. இதை எப்படி சரி செய்வது என்றால், குழந்தைகளுக்கு பெற்றோர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.முதலில், உணவில் இருந்து, இது துவங்க வேண்டும். ‘ரெடி டு ஈட்’ உணவு எளிதாகக் கிடைக்கிறது என்பதற்காக, தேவைக்கு அதிகமாக உணவுப் பொருட்களை வாங்கி, வீட்டில் வைத்து விடுவதை, முதலில் தவிர்க்க வேண்டும்.அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் வாங்கி வைப்பது சரி. ஆனால், ஒரே நேரத்தில், வித விதமான பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி வைப்பது சரியில்லை.ஒரு பிஸ்கட் பாக்கெட் எடுத்தால், ஒன்று அல்லது இரண்டை மட்டும் குழந்தை சாப்பிடுவதில்லை. ‘டிவி’ பார்த்துக் கொண்டே, மொத்த பாக்கெட்டையும் காலி செய்து விடுகின்றன.நம் உணவு முறை என்பது, ஆரோக்கியமான உணவை, வீட்டிலேயே சமைத்து, மூன்று வேளை சாப்பிடுவது. இந்தப் பழக்கத்தை குழந்தைகளிடம் கொண்டு வர வேண்டும்.நம் வழக்கத்தில் உள்ள உணவுகளை, சரியான நேரத்திற்கு குழந்தைகளை சாப்பிடப் பழக்கி விட்டாலே, துரித உணவுகள் மீது குழந்தைகளுக்கு கவனம் செல்லாது. தவிர, தேவையான ஊட்டச்சத்துக்களும் குழந்தைக்கு கிடைக்கும்.நுாறு குழந்தைகளில், 90 குழந்தைகள் உடல் பருமனோடு தான் இருக்கின்றனர். இதில், நாளமில்லா சுரப்பி கோளாறுகள், மரபியல் காரணங்களால் உடல் எடை அதிகரிப்பது என்பது, மிகக் குறைந்த சதவீதம் மட்டுமே.உணவு, உடற்பயிற்சியின்மை போன்ற, வாழ்க்கை முறை மாற்றங்களினால் உடல் பருமன் அதிகரிப்பதே அதிகம். அதிலும், சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருக்கும் குழந்தைகள், இன்னும் அதிக உடல் எடையுடன் உள்ளனர்.குழந்தை பருவத்திலிருந்தே உடல் பருமனாக இருந்தால், சர்க்கரைக் கோளாறு, ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பிரச்னைகள், 10 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விடும்.உடற்பயிற்சி விஷயத்திலும், பெற்றோர் தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். வாரத்தில், ஐந்து நாட்களாவது, தினமும் குறைந்தது ஒரு மணி நேரம், பூங்கா, மைதானத்திற்கு அழைத்துச் சென்று விளையாட வைக்க வேண்டும்.ஒவ்வொரு குழந்தைக்கும், ஏதாவது ஒரு விளையாட்டில், நிச்சயம் ஆர்வம் இருக்கும். அதில் ஈடுபடுத்தினாலே உடல் பருமனை கட்டுக்குள் வைக்கலாம்.விளையாட்டு என்பது, போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மட்டும் அல்ல; ஆரோக்கியத்திற்கானது என, புரிந்தாலே போதும்!

error: Content is protected !!