சென்னை, பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மொழி பாடத்தாள் தேர்வு மட்டும், பிற்பகலில் நடக்கும் என்பதை, அரசு தேர்வு துறை, மீண்டும் உறுதி செய்துள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வுக்கான கால அட்டவணை, கல்வி ஆண்டு துவங்கும்போதே அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன், 11ல், வெளியிடப்பட்ட அறிவிப்பில், பத்தாம் வகுப்புக்கு, 2019 மார்ச், 14ல், தேர்வுகள் துவங்கி, மார்ச், 29ல் முடிவடையும் என, கூறப்பட்டுள்ளது.இதில், மொழி பாட தேர்வுகள் மட்டும் பிற்பகலிலும், முக்கிய பாட தேர்வுகள், காலையிலும் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ், ஆங்கிலம் பாடங்களின், முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கான தேர்வுகள், முறையே, மார்ச், 14, 18, 20, 22ம் தேதிகளில், பிற்பகல், 2:00 மணி முதல், 4:45 மணி வரை நடத்தப்படுகின்றன.கணிதம் – மார்ச், 25; அறிவியல் – மார்ச், 27; சமூக அறிவியல் – மார்ச், 29 மற்றும் விருப்ப மொழி பாடம் – மார்ச், 23 ஆகிய தேதிகளில், காலை, 10:00 மணி முதல் 12:45 வரையில், தேர்வு நடத்தப்பட உள்ளது.இந்த அட்டவணையில், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க, பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என, அரசு தேர்வு துறை இணை இயக்குனர், அமுதவல்லி கூறியுள்ளார்.

error: Content is protected !!