குடியரசு தின விழாவில் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கம், வேளாண்மைத் துறை சிறப்பு விருது ஆகிய பதக்கங்களை பெற்றவர்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிக உற்பத்தி செய்த புதுக்கோட்டை மாவட்ட விவசாயி சேவியருக்கு வேளாண்மைத் துறை சிறப்பு விருது வழங்கப்பட்டது. சென்னை கடற்கரை சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் புதுக்கோட்டை விவசாயிக்கு வேளாண் சிறப்பு விருதினை முதல்வர் பழனிசாமி அளித்தார். இந்த சிறப்புப் பரிசானது, ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், ரூ.5 ஆயிரம் மதிப்புடைய பதக்கமும் அடங்கியதாகும்.
சாதனை என்ன: புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் தெற்கு செட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சேவியர். அவர் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப முறையை பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார். புதுக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து நெல் விதைகளை வாங்கி பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்.
2.5 சென்ட் பரப்பில் நாற்றங்கால் தயார் செய்து அதனை தனது நிலத்தில் சீரான இடைவெளியில் நட்டார். பின்பு, வேளாண்மைத் துறை மூலம் வழங்கிய நவீன களையெடுக்கும் கருவியைக் கொண்டு நடவு செய்த 10 நாள்கள் இடைவெளியில் நான்கு முறை களையெடுத்தார். இதனால், களைகள் நன்கு வெட்டப்பட்டு சேற்றில் புதைக்கப்பட்டு நன்கு மக்கி பயிர்களுக்கு உரமாக்கப்பட்டது.
பயிர்கள் வளர்ந்த நிலையில், அதில் பூச்சி நோய் தாக்குதல் குறைவாகவே காணப்பட்டது. வரிசை முறையில் நடவு செய்ததால் எலி பாதிப்புகளும் இல்லை. இதனால், வளமான கதிர்கள் கிடைக்கப் பெற்றன. நெல் மணிகள் திரட்சியாகவும், அதிக எடையுடனும் காணப்பட்டன. இதனால், பயிர் விளைச்சல் போட்டியில் கூடுதல் மகசூல் பெற்றார். அறுவை செய்த 50 சென்ட் நிலத்தில் 3 ஆயிரத்து 590 கிலோ தானிய மகசூல் அதாவது ஹெக்டேருக்கு 17 ஆயிரத்து 950
கிலோ தானிய மகசூல் எடுத்து மாநில அளவில் முதல் பரிசைப் பெற்றார். திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து அதிக நெல் உற்பத்தி செய்த சேவியருக்கு வேளாண்மைத் துறையின் சிறப்பு விருது அளிக்கப்படுகிறது.
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்: பொது மக்களின் உயிரைக் காப்பதற்காக வீர தீரச் செயல்களில் ஈடுபட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று பதக்கங்கள் வழங்கப்படும். இந்த பதக்கம் ஒவ்வொன்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் அடங்கியது. அதன்படி, மூன்று பேருக்கு அண்ணா பதக்கத்தை முதல்வர் பழனிசாமி அளித்தார்.
குரங்கணி தீ விபத்து: தேனி மாவட்டம் குரங்கணியில் நடந்த தீ விபத்தில் சிக்கியோர்களில் எட்டு பேரின் உயிரை அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் காப்பாற்றியுள்ளார்.
இதேபோன்று, சென்னை அண்ணாநகரில் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை அங்கிருந்த இளைஞர் சூர்யகுமார் மடக்கிப் பிடித்தார். நான்கு சக்கர வாகன பழுதுபார்ப்புப் பணிமனையில் வேலையாளாகப் பணிபுரியும் அவர், வீரதீரச் செயலுக்கான பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். கடந்த டிசம்பரில் வெள்ளங்கி ஏரியில் சிக்கிய மூன்று பெண்கள், மூன்று குழந்தைகளை ஸ்ரீதர் காப்பாற்றினார். வீர தீரச் செயல்களைப் புரிந்த மூன்று பேருக்கும் அண்ணா பதக்கங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

error: Content is protected !!