சர்ச்சைக்குரிய மேற்கு ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.

எனினும், சர்ச்சை தீரும் வரை தனது தூதரகத்தை டெல் அவ்வில் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றப் போவதில்லை எனவும் அந்த நாடு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், சிட்னி நகரில் சனிக்கிழமை கூறியதாவது:
இஸ்ரேலின் நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு அமைப்புகள் அமைந்துள்ள மேற்கு ஜெருசலேம் நகரை, அந்த நாட்டுத் தலைநகராக அங்கீகரிக்கிறோம்.
எனினும், பாலஸ்தீனப் பிரச்னைக்கு இறுதித் தீர்வு எட்டப்பட்டு, சர்ச்சைகள் தீர்ந்த பின்னரே தற்போது டெல் அவிவ் நகரிலுள்ள எங்களது தூதகரத்தை மேற்கு ஜெருசலேமுக்கு மாற்றுவோம்.
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரிக்கும் இரு நாடுகள் தீர்வையே நாங்கள் ஆதரிக்கிறோம்.
அந்த நிலை வரும்போது, கிழக்கு ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்தின் தலைநகராக அங்கீகரிப்போம் என்றார் அவர்.
தற்போது மேற்கு ஜெருசலேம் நகரம் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அந்த நாட்டின் நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் அந்தப் பகுதியில்தான் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும், ஒட்டுமொத்த ஜெருசலேம் நகர் மீதும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே உரிமை கொண்டாடி வருகின்றன. அதன் காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளைத் தவிர, அனைத்து உலக நாடுகளும் ஜெருசலேம் நகருக்கு பதிலாக டெல் அவிவ் நகரில் தூதரகங்களை அமைத்து செயல்பட்டு வருகின்றன.
பாலஸ்தீனம் கண்டனம்: இதற்கிடையே, மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளதற்கு பாலஸ்தீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!