இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் விண்ணப்பித்துள்ளார்.

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களை கபில் தேவ் தலைமையிலான மூவர் கொண்ட குழு நேர்காணல் நடத்தி தகுதியான நபரை பயிற்சியாளராக தேர்வு செய்யும். இதற்காக இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிப்ஸ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். ரமேஷ் பவாரும் மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரருமான கேரி கிறிஸ்டனும் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. தோனி தலைமையிலான இந்திய அணி 2011 உலக கோப்பையை வென்றபோது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிறிஸ்டன்.

அண்மையில் இவரை ஆர்சிபி அணி அடுத்த ஐபிஎல் சீசனுக்கு தலைமை பயிற்சியாளராக நியமித்தது. இந்நிலையில், அவர் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக இவர் தேர்வு செய்யப்பட்டால் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட முடியாது. மனோஜ் பிரபாகர், கிப்ஸ், கேரி கிறிஸ்டன் என போட்டி வலுத்துள்ளது.

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளருக்கான நேர்காணல் வரும் 20ம் தேதி நடக்க உள்ளது.

error: Content is protected !!