ஏப்ரலில் சந்திரயான்-2 நிலவுக்கு அனுப்பப்படும்: விண்வெளிஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

நிகழாண்டு ஏப்ரலில் சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளிஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சந்திரயான்-2 விண்கலத்தை நிகழாண்டில் மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்தோம். தொழில்நுட்பக் காரணங்களால் திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்த இயலவில்லை. அதாவது சில சோதனைகளை எங்களால் நடத்த முடியவில்லை. எனவே, நிகழாண்டில் ஏப்ரல் மாத்தில் சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.
சந்திரயான்-2 விண்கலம், இதுவரை யாரும் சென்றிராத தென் துருவத்தில் தரையிறக்கப்படும். சந்திரயான்-2 திட்டத்தில் விண்கலம், தரையிறங்கும் கலம், ஆராய்ச்சி வாகனம் ஆகியவை இடம்பெறும். இந்த விண்கலம் ஓராண்டுக் காலம் செயல்படும். இந்தக் காலத்தில் நிலவில் பயணித்து அறிவியல் ஆய்வுப் பணியில் ஈடுபடும்.
தரையிறங்கும் கருவி, ஆராய்ச்சி வாகனம் 14 நாள்களுக்கு மட்டுமே செயல்படும் திறன் கொண்டதாக இருக்கும். சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தினால், அது நிலவின் சுற்று வட்டப் பாதையைச் சென்றடைய 45 நாள்கள் பிடிக்கும்.
சீனா உள்ளிட்ட பல நாடுகள் நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன. அவை மத்திய ரேகைப் பகுதியில்தான் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், சந்திரயான்-2 விண்கலம் தென் துருவத்தில் ஆராய்ச்சிப் பணியை மேற்கொள்ளவுள்ளது. இந்தப் பகுதியில் அதிகளவில் தண்ணீர் கிடைக்கும் என உறுதி செய்ய வாய்ப்பிருக்கும்.
பிஎஸ்எல்வி ஏவூர்தி உற்பத்தியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவிருக்கிறோம். இதற்காக கூட்டிணைவு நிறுவனம் ஒன்று எச்ஏஎல், எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. கோவையைச் சேர்ந்த எம்எல்டபிள்யூ, கோத்ரேஜ் போன்ற நிறுவனங்களும் கூட்டிணைவு நிறுவனத்தில் இணைய இருக்கிறார்கள். இந் நிறுவனம் தயாரிக்கும் ஏவூர்தியின் தரத்தைச் சோதனை செய்வது மட்டுமே இஸ்ரோவின் பணியாக இருக்கும் என்றார்.

error: Content is protected !!