‘வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் இணைப்புக்களை கட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். இதற்கான வைப்புத் தொகையை, திட்ட மதிப்பீட்டில் சேர்த்து, அவற்றை தவணை முறை செலுத்த வழி வகை செய்ய வேண்டும்’ என, நகராட்சி நிர்வாக துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவற்றில், முழுமையான குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப் படவில்லை. இதற்கான, புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, செயல்பாட்டில் உள்ள குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களிலும், வீடுகளுக்கு இணைப்பு வழங்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதன்படி, இணைப்புகளை பெற, குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். குறைந்த வருவாய் பிரிவினர், இந்த தொகையை மொத்தமாக செலுத்த சிரமப்படுகின்றனர். பல இடங்களில், வைப்பு தொகையை செலுத்தினாலும், குடிநீர், கழிவு நீர் இணைப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்த, கூடுதல் பணம் கேட்கப்படுகிறது.எனவே, வீடுகளுக்கு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளை பெற முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. அதனால், வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்கான செலவுகளை, திட்ட மதிப்பீட்டிலேயே சேர்க்க அரசு முடிவு செய்து, அரசாணை வெளியிட்டுஉள்ளது.அரசாணை விபரம்: நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளை, கட்டுப்பாடின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் வைப்புத்தொகை மற்றும் இணைப்புக்கான கட்டணத்தை, அந்தந்த வீட்டுக்கான சொத்து வரியுடன் சேர்த்து, 10 தவணைகளாக வசூலிக்க வேண்டும் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்ட விபரங்களை, மாத வாரியாக நகராட்சி நிர்வாகத்துறைக்கு அளிக்க வேண்டும் இதற்காக, நகராட்சி, மாநகராட்சிகளில், குடிநீர், பாதாள சாக்கடை திட்ட துணை விதிகளில், உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!