மாநில அளவில் ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கலை இலக்கியத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர் 100 பேரை தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்பி வைக்கும் திட்டத்தை நிகழாண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்துகிறது.
முதல் கட்டமாக அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் 50 மாணவ, மாணவியர் பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு 14 நாள்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
ரூ.3 கோடி ஒதுக்கீடு: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம், சுற்றுலாத் துறை மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவியர் அந்தந்தப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்லும் கல்விச் சுற்றுலாத் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் ஆகிய பாடங்களில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியரை தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை நிகழாண்டு முதல் செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு, அதை சிறப்பாக செயல்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
குழு மூலம் மாணவர்கள் தேர்வு: அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியரை தேர்வு செய்வதற்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் வெளிநாடு செல்ல தகுதியுடைய மாணவ, மாணவியரை தேர்வு செய்ய உள்ளனர். அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை அளிக்கும் வகையில் சிறந்த படைப்புகளை மாணவ, மாணவியர் தயார் செய்திருக்க வேண்டும். இவை மாவட்ட, மாநில மற்றும் அகில இந்திய அளவில் அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இதுபோன்ற தேர்வு செய்யப்பட்ட அறிவியல் படைப்புகளுக்கு சிறப்பிடம் மற்றும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் சிறந்த படைப்புக்காக தேர்வு செய்யப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் தேர்வு செய்து குழுவுக்கு அனுப்பப்படுகிறது. இதை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு படைப்பின் தன்மை, சிறப்பிடம் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான மாணவ, மாணவியரை தேர்வு செய்வர்.
50 பேர் பயணம்: முதல் கட்டமாக மாநில அளவில் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் 13 மாணவியர் உள்பட 50 பேரை பின்லாந்து, ஸ்வீடன் நாட்டுக்கு அழைத்துச் செல்லவுள்ளனர். இவர்கள் வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு, கல்விச் சுற்றுலா செல்வதற்கான விசா ஆகியவை பெறப்பட்டுள்ளன. இவர்களின் விமானப் பயணச் சீட்டு, வெளிநாடுகளில் சுற்றுலா செல்லும் இடங்களில் தங்குவதற்கான அறை, உணவு ஆகிய செலவுகள் முழுவதையும் பள்ளிக் கல்வித் துறை ஏற்கிறது.
ஜன.21-இல் புறப்பாடு: இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் கூறியது: அறிவியல் தொழில்நுட்பம், கலை இலக்கியத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் பள்ளிக்கல்வித் துறையால் நிகழாண்டில் முதன் முறையாக செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக அறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்த மாணவ, மாணவியர் 50 பேர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இவர்களுடன் ஒரு ஆசிரியர் மற்றும் ஆசிரியை சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் (டிபிஐ) அலுவலகத்துக்கு ஜன.20-ஆம் தேதி அழைத்து வரப்படவுள்ளனர். அதைத் தொடர்ந்து கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் வழியனுப்பு விழா நடைபெறுகிறது.
21-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இவர்கள் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா சென்று பிப்.3-இல் சென்னை திரும்புகின்றனர். இவர்களில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மேல்நல்லாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள் எஸ்.சஞ்சய்குமார், ஆர்.மோகன்பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

 

error: Content is protected !!