பெரம்பலுார்: -கஜா புயலால் வீடுகளை இழந்து, வீதிகளில் வசித்த நரிக்குறவர் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்த, 142 பேருக்கு, பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், தங்கள் சொந்த செலவில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிசை வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளனர்.கஜா புயல், நரிக்குறவர், பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடிசைகளையும் விட்டு வைக்கவில்லை. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள, மேலஒட்டங்காடு, கொண்டிக்குளம், துவரங்குறிச்சி, ஏரிப்புறக்கரை, சேதுபாவாசத்திரம் ஆகிய ஊர்களில் வாழும் இச்சமூகத்தினர், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இங்குள்ள மக்கள், வீடுகளை இழந்து, வீதிகளிலும், பஸ் ஸ்டாண்ட், நிழற்குடை, பள்ளிகளிலும் தஞ்சம் புகுந்தனர்.உண்ண உணவு, உடுக்க உடை இல்லாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து அரசும், தனியார் அமைப்புகளும் அரிசி, பிஸ்கட், வாட்டர் பாட்டில், நாப்கின் போன்ற நிவாரண பொருட்களை வழங்கின. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரணப்பணிகளுக்கு அரசு அலுவலர்கள் முடுக்கிவிடப்பட்டனர்.இந்த நிலையில், இப்பகுதியில், பெரம்பலுார் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர், தேவநாதனை, மீட்பு பணி அலுவலராக அரசு நியமித்தது. நிவாரணப் பணிகளுக்காக இந்த கிராமங்களுக்கு சென்ற தேவநாதனிடம், ‘கிடைத்த நிவாரணப்பொருட்களை பாதுகாத்து வைத்து, அடுத்த வேளைக்கு பயன்படுத்திக் கொள்ளக்கூட இருப்பிடம் இல்லை’ என, நரிக்குறவர் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்த மக்கள், கதறினர். இவர்களுக்கு குடிசை அமைத்து கொடுப்பதே, உரிய நிவாரணமாக இருக்கும் என கருதிய தேவநாதன், தஞ்சாவூர் கலெக்டர், அண்ணாதுரையிடம் இத்தகவலை தெரிவித்தார். அப்போது தான், அந்த மக்களுக்கு, ஏற்கனவே, அம்பாள்புரம் பகுதியில், 2003ல் அரசால் இலவச பட்டா வழங்கியதும், அந்த மக்கள் குடிசை அமைக்க வசதி இல்லாமல், அந்த இடம் தற்போதும் தரிசாக கிடப்பதும் தெரியவந்தது.அரசு வழங்கிய இடத்தில், அவர்களுக்கு குடிசை வீடு கட்டிக்கொடுக்க முடிவு செய்த திட்ட இயக்குனர் தேவநாதன், அதற்கான அனுமதியை, தஞ்சை கலெக்டரிடம் பெற்றார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண் இயக்குனர், கஜலட்சுமியிடம் பேசினார். ஆறு லோடு மூங்கில் களி வழங்கவும், மலிவு விலையில், 50 ஆயிரம் கீற்று வழங்கவும், அரியலுார் மாவட்டம், தத்தனுார் சுய உதவிக்குழு பெண்கள் சம்மதம் தெரிவித்தனர். இதோடு அரியலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களிமிருந்து வசூலிக்கப்பட்ட, 6 லட்சம் ரூபாய் என, 20 லட்சம் ரூபாயில், குடிசை வீடு கட்டிக்கொடுக்க திட்டம் தீட்டப்பட்டது.பெரம்பலுார் மாவட்டம், செட்டிக்குளம் கிராமம், அரியலுார் மாவட்டம், செந்துறை, டி.பழூர், ஜெயங்கொண்டம், திருமானுார், தத்தனுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, குடிசை அமைக்கும் தொழிலாளர்கள், 78 பேர் மூலம், 142 குடிசை வீடுகள் அமைக்கப்பட்டது. இந்த குடிசை வீடுகள், நரிக்குறவர்கள் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு, சில நாட்களுக்கு முன் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் தற்போது, அங்கே குடியேறி உள்ளனர்.இதுகுறித்து, பூம்பூம் மாட்டுக்காரர் கூட்ட தலைவர், மாரியப்பன் கூறியதாவது:புயல் காற்று, எங்கள் குடிசைகளை துாக்கி சென்றுவிட்டது. எங்கள் மக்களுக்கு, அரசு சார்பில், ஏற்கனவே இடம் கொடுக்கப்பட்டது. அந்த இடமே தெரியாமல் இருந்தோம். இடத்தையும் கண்டுபிடித்து, எங்களுக்கு குடிசையும் போட்டுக்கொடுத்த அதிகாரிகள் நல்லா இருக்கணும். எங்கள் உயிர் இருக்கும் வரை, இதை மறக்கமாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!