சென்னை: ‘வரும், 15ம் தேதி முதல், இரண்டு நாட்கள், கனமழை கொட்டும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், இலங்கைக்கு தென் கிழக்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.இது, படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. அடுத்த, 24 மணி நேரத்தில், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.இது குறித்து, சென்னை மண்டல வானிலை மைய துணை பொது இயக்குனர், பாலசந்திரன் அளித்த பேட்டி:தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம், தமிழக, வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் தெற்கு மாவட்டங்கள் இடையே கரையை கடக்கும்.இதனால், 15, 16ம் தேதிகளில், தமிழக, வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில், கனமழை அல்லது மிக கனமழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், நாளை இரவு முதல், வங்க கடலை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். மணிக்கு, 75 கி.மீ., வேகம் வரை, சூறாவளி காற்று வீசவும் வாய்ப்புள்ளது.எனவே, வங்க கடலின் தெற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு பகுதிகளுக்குள், 16ம் தேதி வரை செல்ல வேண்டாம் என, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!