நோயாளிகளிடம், 10 ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று, சிகிச்சை அளித்து வரும், 80 வயது டாக்டரின் சேவை, பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், மோகனுாரைச் சேர்ந்தவர், டாக்டர் ஜனார்த்தனன், 80. இவர், மோகனுார், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மருத்துவமனையில், பணியாற்றி ஓய்வு பெற்ற பின், மீண்டும் அங்கேயே மருத்துவ ஆலோசகராக பணியாற்றி வருகிறார். தன் பணி நேரம் போக, மீதி நேரத்தில், வீட்டில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறார். கட்டணம் மிக மிக குறைவாக பெறுவதால், பலரும் அவரை தேடி வருகின்றனர்.அவருக்கு, இந்திய மருத்துவர் சங்கம் சார்பில், ‘சேவையில் இருக்கும் மூத்த மருத்துவர்’ என்ற, ‘டாக்டர் விஸ்வநாதன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:என் தந்தை கிருஷ்ணராவ், மருத்துவராக பணியாற்றினார். அவர், நோயாளிகளிடம், குறைந்த கட்டணம் வசூலித்தார். அவர் வழியில் நானும், குறைந்த கட்டணம் வாங்குகிறேன். நான், 1966 – 68ல், முதன் முதலில், மதுரை மாவட்டம், வெள்ளளூர் கிராமத்தில், டாக்டர் தொழிலை மேற்கொண்டேன். அதையடுத்து, நெல்லை மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றினேன்.தொடர்ந்து, 1970ல், மோகனுாரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி, 1997ல் ஓய்வு பெற்றேன். தற்போது, அங்கு, மருத்துவ ஆலோசகராக, தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.பணி நேரம் போக, மீதி நேரத்தில், வீட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். அதற்காக, துவக்கத்தில், மூன்று ரூபாய் கட்டணம் பெற்றேன்; தற்போது, 10 ரூபாய் பெறுகிறேன். நோயாளிகளுக்கு வசதியில்லை என்றால், அதுவும் வாங்க மாட்டேன்.ஆலை ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் என்பதாலும், அவர்கள் பெறும் ஓய்வூதியமும், 1,000 – 1,500 ரூபாய் என்பதாலும், அவர்களிடம் குறைந்த கட்டணம் வாங்குகிறேன். அவர்கள் குடும்பத்தினர், மூன்று தலைமுறைகளாக என்னிடம் சிகிச்சை பெறுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

error: Content is protected !!