மேல்நிலைப் பொதுத் தேர்வு; தேர்வுத் துறை நடவடிக்கை

சென்னை: 2015-16ம் கல்வியாண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (04.03.2016) தொடங்கி 01.04.2016 வரை நடைபெறவுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அரசு தேர்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் பற்றின அறிக்கையை, அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம்:

மேல்நிலைத் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,550 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,39,697 மாணவ/மாணவியர்கள் மேல்நிலைப் பொதுத் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் 3,91,806 பேர், மாணவியர் 4,47,891 பேர் ஆவர். மாணவர்களை விட 56,085 மாணவிகள் கூடுதலாக தேர்வெழுதவுள்ளனர். பள்ளி மாணவர்களை தவிர 42,347 தனித்தேர்வர்களும் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர்.

சென்னை மாநகரில் 410 பள்ளிகளிலிருந்து 51,091 மாணவ/மாணவியர்கள் 145 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர். இவர்களில் 23,617 மாணவர்கள் மற்றும் 27,474 மாணவிகள் உள்ளடங்குவர்.

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 35 தேர்வு மையங்களில், 135 பள்ளிகளை சார்ந்த 14,337 மாணவ/மாணவியர் தேர்வெழுத உள்ளனர். அவர்களில் மாணவர்கள் 6556 பேர் மற்றும் மாணவியர் 7781 பேரும் ஆவர்.

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு மொத்தம் 2421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறைவாசிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, மேல்நிலைப் பொதுத் தேர்வினை 106 சிறைவாசிகள் பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத உள்ளனர்.

மேல்நிலைப் பொதுத் தேர்வினை தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று மேல்நிலைத் தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் எண்ணிக்கை 5,56,498 ஆகும்.

மாற்றுத் திறனாளி தேர்வர்கள்

மேல்நிலைப் பொதுத் தேர்வில் 1867 டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர்/வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப் பாடவிலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம்) ஒதுக்கிடவும் அரசுத் தேர்வுத் துறையால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது..

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்)

அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. இவ்வாண்டு முதன்முறையாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளின் மூலமாகவே படித்து அறிந்து கொள்ளலாம்.

தேர்வு எழுதுபொருட்கள்

அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாள்கள், கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. தேர்வின் போது தேர்வர்களது புகைப்படம், பதிவென், பாடம் முதலான விவரங்கள் அச்சிடப்பட்ட முகப்புச் சீட்டுகள் முதன்மை விடைத்தாளுடன் இணைத்து தைக்கப்பட்டே தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. தேர்வர் முகப்புச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கையொப்பமிட்டால் மட்டுமே போதுமானது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் ஆகிய இடங்களில் போதிய காவல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டி காவல் துறைத் தலைவருக்கும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கால கண்காணிப்பு ஏற்பாடுகள்

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைச் சார்ந்த இயக்குநர்கள்,இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வு முன்பணிகளையும், தேர்வுக்கால பணிகளையும் மேற்பார்வையிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக தோராயமாக சுமார் 4,000 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலைபேசி தடை

இவ்வாண்டு தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் அலைபேசியை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒழுங்கீனச் செயல்பாடுகள்

தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாட்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைக்கேடாக நடந்துக்கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.

மேலும் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை இரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை இரத்து செய்திட பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

error: Content is protected !!