அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக சுகாதாரத் துறைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட அரசு மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லாததால், ஏழை மக்கள் சுமார் ரூ. 7ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரை செலவழித்து தனியார் மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளது.
எனவே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ள மக்களின் நலனுக்காக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என நான் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நீதிபதிகள், தமிழகத்தின் அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஓராண்டுக்குள் ஏற்படுத்த கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டனர்.
ஆனால் இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு, இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை, 2019 ஆம் ஆண்டு ஜன. 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

error: Content is protected !!