திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாரா கிளைடர் விமானப் பயிற்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் கடத்தூரைச் சேர்ந்தவர் ராஜா ஞானப்பிரகாசம்.  இவர் கிளைடர் விமானத்தை எவ்வாறு தயாரிப்பது?  அதில் எவ்வாறு பறப்பது? என்பது குறித்து தமிழகம் முழுவதும் மாணவர், மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு வந்த அவர்,  பாரா கிளைடர் விமானத்தில் பறந்து  காட்டும் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர், உயிர் தொழில்நுட்பத்துறை துறைத்தலைவர் சுதாகர் மற்றும் மாணவர், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதில், ராஜா ஞானப்பிரகாசம்  தான் தயாரித்த பாரா கிளைடர் விமானத்தில், சுமார் 500 அடி உயரத்தில் சுமார் 15 நிமிடம் பறந்து காட்டினார். இதுகுறித்து ராஜா ஞானப்பிரகாசம் கூறியது:
இதுவரை கிளைடர் விமானம் விளையாட்டிற்காக மட்டுமே பயன்பட்டு வந்தது. தற்போது இந்த கிளைடர் விமானங்கள் காடுகளில் விலங்குகள் கணக்கெடுப்புக்கும், நகர்ப்புற பகுதிகளில் பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  8ஆம் வகுப்பு வரை படித்த என்னால் இந்த காரியத்தை செய்ய முடிகிறது என்றால், மாணவர்களாகிய நீங்கள் இந்த கிளைடர் விமானத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.
இவர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக பறந்து சாதனை படைத்துள்ளார்.  அடுத்ததாக 3 பேர் அமர்ந்து பறக்கும் வகையிலான கிளைடர் விமானத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.  இந்த முயற்சி சாத்தியமாகும் பட்சத்தில் உலகிலேயே 3 பேர் பறக்கும் கிளைடர் விமானத்தை தயாரித்த சாதனையாளர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!