காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருக்கும் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, திங்கள்கிழமை (டிச.17) கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மணிக்கு சுமார் 13 கி. மீ. வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசைகளில் நகர்ந்து, சென்னைக்கு 690 கி. மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கு 890 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது ஞாயிற்றுக்கிழமை புயலாக மாறி, பின்னர் திங்கள்கிழமை தீவிரப் புயலாக மாறி, ஆந்திர கடற்கரைப் பகுதியில் ஓங்கோலுக்கும் -காக்கிநாடாவுக்கும் இடையே பிற்பகலில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு புயல் முன்னறிவிப்புக் கொடியான 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக்  கூண்டு ஏற்றப்பட்டது.
காரைக்காலில்…: இதேபோல், காரைக்கால் துறைமுகத்திலும் வானிலை ஆய்வு மைய அறிவுறுத்தலின் பேரில், 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஏற்றப்பட்டதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடல் சீற்றம்: இதற்கிடையில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் சனிக்கிழமை கடல் சீற்றமாகக் காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காலை முதலே காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.
இதேபால், காரைக்கால் மாவட்டத்திலும் கடல் லேசான சீற்றத்துடன் காணப்பட்டது. வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. பிற்பகல் சில மணி நேரம் பரவலாக சூறைக் காற்று வீசியது.

error: Content is protected !!