குடியரசு தினத்தையொட்டி 12 விவசாயிகள், 14 மருத்துவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த 50,000 பேரில், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ, 14 பேருக்கு பத்ம பூஷண், 4 பேருக்கு (மொத்தம் 112) பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில், 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 விவசாயிகள், 11 மாநிலங்களைச் சேர்ந்த 14 மருத்துவர்கள், விளையாட்டு துறையினர் 9 பேருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்டுள்ள விவசாயிகளில், சோளம் மற்றும் காளாண் சாகுபடி செய்த கான்வால் சிங் சௌஹான், கேரட் சாகுபடி செய்த வஸ்ரம்பாய் மார்வனியா, காலிபிளவர் பயிரிட்ட ஜெகதீஷ் பிரசாத் பாரிக் ஆகியோரும் அடங்குவர். தொழில்நுட்பம், அறிவியல் முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்து சாதனை படைத்த பாரத் பூஷண் தியாகி, ராம் சரண் வர்மா, வெங்கடேஸ்வர ராவ் யதலபள்ளி, பழைய பாரம்பரிய விதைகள் மற்றும் ஆர்கானிக் முறை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயம் மேற்கொண்ட கமலாபால் புஜாரி, ராஜ்குமார் தேவி, பாபுலால் தஹியா, ஹகும்சந்த் படிதாருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்த மற்றும் கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளித்த 14 மருத்துவர்களுக்கும் பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ராமசாமி வெங்கடசாமி, ஆர்.வி. ரமணி, மம்மன் சாண்டி, ஜார்க்கண்டை சேர்ந்த சியாம பிரசாத் முகர்ஜி, மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஸ்மிதா, ரவிந்திர கோக்லே ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
விளையாட்டு துறை பிரமுகர்களில், தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் வெளிநாட்டு நண்பர்கள் விருது, யேமனில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்க உதவிய ஜிபூட்டி அதிபர் இஸ்மாயில் உமர், தென்னாப்பிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிரவீண் கோர்தன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு 50,000 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. கடந்த 2014ஆம் ஆண்டில் 2,200 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது 20 மடங்கு அதிகமாகும்.

error: Content is protected !!