தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை வலுவடைந்து, புயலாக உருவானது.  இந்த புயலுக்கு “பெய்ட்டி’  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறவுள்ளது.  இதன் காரணமாக, வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் சனிக்கிழமை கூறியது:
தென் கிழக்கு  வங்கக்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை  நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை நண்பகலில் தென் மேற்கு மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது.
மேலும், இது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 670 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து,  சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் புயலாக மாறியது. இதற்கு தாய்லாந்தின் “பெய்ட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புயல் சனிக்கிழமை மாலை நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் 17 கி.மீ. வேகத்தில் வடக்கு, வடமேற்கு திசையில்  நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து, வடக்கு, வடமேற்கு திசை  நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரம் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே திங்கள்கிழமை (டிச.17) பிற்பகலில் கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான  மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். தரைக்காற்றை பொருத்தவரை மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றார் அவர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (16, 17) ஆகிய நாள்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் மழை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்யும். தரைக்காற்று பலமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!