சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படவுள்ள புதுமைப் பள்ளி விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, கற்றல் திறன் மேம்பாடு, கற்பித்தலில் புதுமை, அடிப்படை வசதிகள் என அனைத்து வகையிலும் புதுமையான விதத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது வழங்கப்படவுள்ளது.
128 பள்ளிகளுக்கு ரொக்கப் பரிசுகள்:  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, ஓர் உயர்நிலைப்பள்ளி, ஒரு மேல்நிலைப்பள்ளி என 4 பள்ளிகளுக்கு இந்த விருது வழங்கப்படும்.
விருதுக்கு தேர்வு செய்யப்படும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.  மொத்தம் 128 பள்ளிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம்  மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். கற்றல் திறனை மேம்படுத்த உதவும்.  புதுமையான கற்பித்தல் முறைகளைப் பின்பற்ற ஆசிரியர்களிடம் ஊக்கம் ஏற்படும்.  பள்ளிகளின் அனைத்து வகை கட்டமைப்பு வசதிகளான சுற்றுச்சூழல்,  தூய்மை,  கட்டட வசதி,  குடிநீர்-கழிப்பறை வசதிகள் நிறைவு செய்யப்படும்.
தேர்வுக்குழு அமைப்பு:  புதுமைப்பள்ளி விருதுக்காக பள்ளிகளை தேர்வு செய்ய மாநில அளவில் ஒரு தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  பள்ளிக்கல்வி இயக்குநர் இதன் தலைவராகவும், தொடக்கக் கல்வி இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலை) உறுப்பினர் செயலராகவும் செயல்படுவர். மாநில தேர்வுக் குழுவுக்கு பள்ளிகளை தேர்வு  செய்து பரிந்துரை செய்ய மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் ஒரு தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
என்னென்ன அம்சங்கள்? விருதுக்காக பள்ளிகளை தேர்வுசெய்யும்போது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன கழிப்பறைகள், கற்கும் சூழலை மேம்படுத்த வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டுதல், ஆங்கில பேச்சுப்பயிற்சி, யோகா பயிற்சி கணினிவழி கற்றல் முறை வசதிகள், நூலக வசதி,  விளையாட்டுப் போட்டிகளில் அனைத்து மாணவர்களையும் பங்கு கொள்ளச் செய்தல்,  தேசிய மாணவர் படை,  நாட்டு நலப்பணித் திட்டம்,  சாரணர் படை ஆகியவற்றின் செயல்பாடுகள்,  பள்ளிக்கு வருகை 90 சதவீதத்துக்கு மேல் இருத்தல்  ஆகிய விஷயங்கள் கருத்தில்கொள்ளப்படும்.
இந்த விருதுகளுக்கு அரசுப் பள்ளிகள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில் வரும் பிப். 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையிலான தேர்வுக் குழுவினர் ஆய்வு செய்து மதிப்பெண்கள் வழங்குவர். இதைத் தொடர்ந்து மாவட்டத் தேர்வுக் குழுவினர் மாநிலத் தேர்வுக் குழுவினருக்கு பரிந்துரைகளை அனுப்புவர்.  இதையடுத்து இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு விருதுகளுக்குரிய பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.

error: Content is protected !!