மாணவர்கள் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் நேசிக்க வேண்டும்  என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழறிஞர்களுக்கு விருது, பண முடிப்பு வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உ.வே.சா. தமிழறிஞர் விருதுக்கு பேராசிரியர் ம.பெ.சீனிவாசனும், பெரியசாமி தூரன் தமிழ்ப் படைப்பாளர் விருதுக்கு எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதியும், டாக்டர் நல்ல பழனிசாமி பிற துறைத் தமிழ்த் தொண்டர் விருதுக்கு பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கி.முத்துசெழியனும் தேர்வு செய்யப்பட்டனர்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 6-ஆம் ஆண்டு விழாவில் இவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கோவை- காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரியில் இவ்விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு  மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார். டாக்டர் தவமணிதேவி பழனிசாமி வரவேற்றார். மையத்தின் செயலாளரான கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் விருது பெற்றவர்களை அறிமுகப்படுத்தினார்.
இதில், இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வு மைய முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ம.பெ.சீனிவாசன், கு.சின்னப்ப பாரதி, கி.முத்துசெழியன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார். அவர்
பேசியதாவது:
தமிழ் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் நாம் பழங்கதைகள் பேசுவதைக் கைவிட வேண்டும். நமது பண்பாடைக் குறித்த பேச்சுகள். பழமையானதாக இல்லாமல் முன்னோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும். வருமுன் காப்பது என்பது நோய்களுக்கு மட்டுமல்ல, நம் மொழிக்கும் பொருந்தும். ஒரு காலத்தில் செம்மொழிகளாக இருந்த லத்தீன், ஹீப்ரு, சம்ஸ்கிருதம் போன்றவை இன்று பேச்சு வழக்கில் இல்லை. அவைபோல தமிழும் ஆகிவிடாமல், வழக்கு மொழியாக, படைப்பு மொழியாக, அறிவுசார் மொழியாக தமிழ் இருக்க வேண்டும். நாம் பேசுவதும், எழுதுவதும், படிப்பதும் தமிழாக இருக்க வேண்டும். வீடுகளில் கட்டாயம் தமிழில் பேசிக் கொள்ள வேண்டும் என்றார்.
இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
ஈராயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர் கற்றும், பேசியும் வந்த தமிழ் மொழி தற்போது நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் எதை இழந்தாலும் மொழியை இழக்கக் கூடாது. தமிழ் இலக்கணங்களை, இலக்கியங்களை, நாம் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. காலம் காலமாக தொடர்பு அறுபடாமல் தொடர்ந்து வருவதில் தமிழுக்கு இணையான மொழி வேறெதுவும் இல்லை.
இன்றைய மாணவர்கள் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் நேசிக்க வேண்டும்
நேசிக்க வேண்டும். நவீன இலக்கியத்தில் இருந்து சங்க இலக்கியங்களை நோக்கிச் செல்ல வேண்டும். அவை நம் பெருமைக்குரியவை. ஆனால், நமது பெருமையை நாமே அறியாதவர்களாக இருக்கிறோம். தமிழகத்தின் வரலாறு, தமிழின் வரலாறு இன்றைய மாணவர்களுக்குத் தெரியவில்லை. இன்றைய தலைமுறையினர் மறந்துபோனதையெல்லாம் நினைவூட்டும் பணியைச் செய்பவர்கள்தான் எழுத்தாளர்கள் என்றார்.
முன்னதாக,  டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் எழுதிய “சாமானியனும் சர்க்கரை நோயும்’ என்ற நூலை டாக்டர் நல்ல பழனிசாமி வெளியிட,  எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி பெற்றுக் கொண்டார்.
விருது பெற்ற மூவரும் ஏற்புரையாற்றினர். பேராசிரியர்  பெ.இரா.முத்துசாமி நன்றி கூறினார்.

error: Content is protected !!