2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி மொழி பெயர்ப்பு விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மு.யூசுஃப்பிற்கு தமிழ் மொழி பெயர்ப்புக்கான விருது கிடைத்துள்ளது.
இது தொடர்பாக சாகித்ய அகாதெமியின் செயலர் டாக்டர் கே.ஸ்ரீநிவாஸ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜி.ஆர். இந்துகோபனின் “மணியன் பிள்ளையுட ஆத்ம கதா’ எனும் மலையாள சுயசரிதையை “திருடன் மணியன்பிள்ளை’ எனும் பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்த குளச்சல் மு.யூசுஃப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தவிர, சிறுகதைகளின் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த சுபஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி, ஒடிய மகாபாரத கவிதைகளை ஹிந்தியில் மொழியாக்கம் செய்த பிரபாத் திரிபாதி, ஆங்கில மகாபாரத கதையை கன்னட த்தில் மொழி பெயர்ப்பு செய்த மறைந்த கிராடி கோவிந்த்ராஜு, சம்ஸ்கிருத ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்த எம். லீலாவதி, தோக்ரி மொழிக் கவிதைகளை தெலுங்கில் மொழியாக்கம் செய்த ஏ. கிருஷ்ணா ராவ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுளளனர்.
மொத்தம் 24 பேர் இந்த மொழிபெயர்ப்புக்கான விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். விருதுக்குத் தேர்வானவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை, தாமிரப் பட்டயம் ஆகியவை பின்னர் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!