தமிழகத்தில் அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்க 3 புதிய திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
பெங்களூரில்  உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையமான (இஸ்ரோ)  யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குநரும்,  சந்திரயான்- மங்கள்யான் செயற்கைக்கோள் திட்டங்களின் முன்னாள் இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரையை  தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராக  அண்மையில் தமிழக அரசு நியமித்தது.
இந்த நிலையில், அவர் திங்கள்கிழமை கூறியது:-
சாதாரண மக்களிடையே அறிவியல்,  தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்வதே தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் முக்கியமான நோக்கமாகும்.   இதன்படி,   ஊரகப் பகுதிகளில் அறிவியல், தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்லவும், அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொழிலகங்களுக்குத் தேவையான வகையில் அறிவியல் திறன் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் 3 புதிய திட்டங்களை வகுத்திருக்கிறோம்.
ஊரகப் பகுதிகளில் அறிவியல்,  தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் என்ற திட்டத்தின்படி,   ஊரக மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்குத் தேவையான தொழில்நுட்ப அடிப்படையிலான பல்வேறு நுட்பங்களைக் காட்சிப்படுத்தவிருக்கிறோம்.
இதற்காக பிப்ரவரி 4 முதல் 15-ஆம் தேதி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தால் ஆரம்பநிலை தொழில்முனைவோராகத் துடிக்கும் பள்ளி,  கல்லூரி மாணவர்கள்,  சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள்,  கிராம மக்கள் பயனடைவர்.
இதே காலக்கட்டத்தில் 20 மாவட்டங்களில் மாணவர்கள்,  பொதுமக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.   மகளிர் சுய உதவிக் குழுக்கள்,  விவசாயிகளால் சிறப்பு உரைவீச்சுகள்,  பயிலரங்குகள்,  பயிற்சி வகுப்புகள், விழிப்புணர்வு முகாம்கள், செயல்முறை விளக்கங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கின்றன.
இவை தவிர,  தமிழகத்தின் 24 மாவட்டங்களில் பிப். 4 முதல் 8-ஆம் தேதி வரை தொழிலகங்களின் தேவைகளுக்காக அறிவியல், தொழில்நுட்ப திறன் கட்டமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  இந்த நிகழ்வுகளில் பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடையலாம் என்றார்.

error: Content is protected !!