இந்தியாவின் சமூக, பொருளாதார மாற்றத்துக்கு அறிவியல்தான் ஆதாரப்புள்ளி. எனவே அறிவியல் ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும் என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய்ராகவன் கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் தலைமையில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ்களை ஆளுநர் வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அறிவியல் ஆலோசகர் கே.விஜய்ராகவன் பேசியதாவது:
இந்தியாவின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு அறிவியல்தான் ஆதாரப்புள்ளி. எனவே, அறிவியல் துறையை மேம்படுத்துவது மிக அவசியம். ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை, இந்த ஆதாரப்புள்ளி இதுவரை சரியான இடத்தில் நிலைநிறுத்தப்படாமல் இருந்து வந்தது. இப்போதுதான் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் அறிவியலை வலுப்படுத்த, நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களை மேலும் மேம்படுத்துவது, கடுமையான சவால்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் நாட்டின் சிறந்த ஆராய்ச்சிக் கூடங்களை மேம்படச் செய்வது, அறிவியல் ஆராய்ச்சிக்கான வளங்களை அதிகரிக்கச் செய்து, அந்த வளங்களைப் பயன்படுத்துவதற்குள்ள தடைகளை நீக்குவது போன்ற முயற்சிகளை முதலில் மேற்கொள்வது அவசியம். இதற்கு அரசு நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதோடு, தொழில்நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய பங்களிப்பை அதிகரிக்க முன்வரவேண்டும்.
அதுபோல, சிறந்த சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதைப் போல, நாமும் தனிப்பட்ட முறையில் இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதை அதிகரிக்க வேண்டும்.
அப்போதுதான் உலக அளவில் அறிவியல் துறையில் நாம் முன்னிலை பெறமுடியும். எரிசக்தி, சுற்றுச்சூழல், மின்சாரம், சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, சாதாரண மக்களும் வாங்கக் கூடிய வகையிலான திட்டங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா சமூக, பொருளாதாரத்தில் முன்னேற முடியும் என்றார் அவர். இந்தப் பட்டமளிப்பு விழா மூலம் பல்கலைக்கழக துறைகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 1,58,393 மாணவ, மாணவிகள் பட்டச் சான்றிதழ்களைப் பெற்றனர்.
முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ஆண்டறிக்கையை வாசித்தார். பதிவாளர் குமார், உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா விழாவில் பங்கேற்றனர்.

error: Content is protected !!