அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் ஈடுபட்டு பயன்பெறும் வகையில் ‘ஸ்கோப்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் 2018-19ம் கல்வியாண்டில் குவாலிட்டி என்ற தலைப்பின் கீழ் அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘ஸ்கோப்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதாவது ஒரு மாவட்டத்திற்கு 20 பள்ளிகள் வீதம் 32 மாவட்டங்களில் உள்ள 640 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.
இம்முறையானது, செயல்வழி கற்றல் என்னும் பண்பினை அடிப்படையாக கொண்டது. இம்முறையில் மாணவர்கள் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ இணைந்து, ஏதேனும் ஒரு பிரச்னையை தேர்ந்தெடுத்து, அதற்கான தீர்வை சோதனைகளின் வழியாக கண்டறிவதே ஆகும்.
பள்ளிகளில் தற்போதைய கற்பித்தல் முறையில் தேர்வுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், மெல்லக்கற்கும் மாணவர்களிடையே ஒருவித தயக்கத்தையும், நம்பிக்கையின்மையையும் தோற்றுவித்துள்ளது. இதனால் சில மாணவர்கள் கற்றலில் பின்னடைவை சந்திக்கின்றனர். அது அவர்களிடையே ஆர்வமின்மையை தோற்றுவித்து, பள்ளியில் இருந்து விலக காரணமாக உள்ளது. பள்ளிகளில் அனைத்துவித மாணவர்களுக்கும் சமமாக கற்கும் சூழ்நிலையை உருவாக்கி கற்றலை ஒரு மகிழ்ச்சியான செயல்பாடாக மாற்றி மாணவர்களுக்கு அளிக்க வேண்டியதுள்ளது. இது கற்றலில் மாணவர்களிடையே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி பள்ளி செயல்பாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்க வைக்கிறது.
‘ஸ்கோப்’ செயல் திட்டம் மாணவர்கள் ஒரு குழுவாக செயல்திட்டத்தை மேற்கொண்டு, அதன் முடிவுகளை காட்சிப்படுத்துதலை உள்ளடக்கியதாகும். கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல் மற்றும் பொருளாதார பாடங்களில் கண்டறியப்பட்ட பகுதிகளில் செயல் ஆய்வுத்திட்டத்தை மேற்கொண்டு, அதன் முடிவுகளை காட்சிப்படுத்த வேண்டும்.
இதற்கான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி, சென்னையில் 2 நாட்கள் நடந்தது. இதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தை சிறப்பாக கொண்டு செல்லும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 640 பள்ளி முதுகலை பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் அதற்குரிய பாடவாரியான பயிற்சி மதுரையை அடுத்த பில்லர் மையத்தில் கடந்த 17ம் தேதி துவங்கியது. இப்பயிற்சி 21ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்போர் ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற முதன்மைக்கருத்தாளர் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களாவர். இதனடிப்படையில் ஒரு பாடத்திற்கு 10 பேர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 பாடத்திற்கு, மொத்தம் 70 முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
error: Content is protected !!