இளையதலைமுறையினர் விளையாட்டில் ஆர்வம் பெறவே அரசுப் பணிகளில் 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 70 ஆண்டு வளர்ச்சி மற்றும் அதற்காக நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் ஆற்றி வரும் பங்களிப்புக் குறித்தும் பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய காபி டேபிள் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புத்தகத்தை வெளியிட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி பெற்றுக் கொண்டார்.
விழாவில் முதல்வர் பழனிசாமி மேலும் பேசியது: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன வளர்ச்சியில் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசனின் பங்களிப்பு சுமார் 50 ஆண்டுகளாக இருந்திருக்கிறது. பொது வாழ்க்கையில் அவருடைய பணிகள் குறித்தும், நிர்வாகத் திறமை, சிறந்த தொழில் அதிபர், விளையாட்டுத் துறையில் சிறந்த நிர்வாகி என்ற அவரது பன்முக ஆற்றல் குறித்தும் புத்தகத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் முதலாளியாக உயரும் முன் சிறந்த தொழிலாளியாக இருக்க வேண்டும். அப்படிப் பணியாற்றியவர்கள்தான் பிற்காலத்தில் சிறந்த முதலாளியாக உயர முடியும் என்பதற்கு என்.சீனிவாசன் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
வெகு தொலைவில் இல்லை: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் டிஎன்பிஎல் என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழகத்தின் கிராமப்புறங்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் திறமையானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மாநில, தேசிய அணிகளில் இடம்பெற்று வருகின்றனர்.
இந்தச் செயலுக்காக இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் சீனிவாசனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையிலும் செயல்பட வேண்டும் என்றார். இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், கபில்தேவ், ஜி.ஆர்.விஸ்வநாத், ஜவஹல் ஸ்ரீநாத், கே.ஸ்ரீகாந்த், அனில் கும்ப்ளே, ராகுல் திராவிட், கௌதம் கம்பீர், யுவராஜ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!