சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சர்க்கரை நோய்க்கான பட்டயப்படிப்பு விரைவில் தொடங்கப்படும் என கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் சர்க்கரை நோய்த் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர் எம்.விஸ்வநாதன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் சர்க்கரை நோய் குறித்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம் பேசியதாவது:
நாட்டிலேயே முதன் முதலாக சர்க்கரை நோய்க்கென சிறப்பு கிளினிக் ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர் விஸ்வநாதன். அவர் அன்று தொடங்கிய சர்க்கரைப் பிரிவு பின்னர் தனித்துறையாக மாறி தற்போது தமிழக அரசின் சிறப்பு அந்தஸ்து பெற்று சர்க்கரை நோய் நிலையமாக உயர்வு பெற்றுள்ளது. இங்கு நாளொன்றுக்கு சுமார் எண்ணூறு முதல் தொள்ளாயிரம் பேர் வரை வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். இது தவிர தினமும் சுமார் 150 நோயாளிகளுக்கு இன்சுலின் வழங்கப்படுகிறது. சர்க்கரை நோய் குறித்து பல்வேறு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவில் ஓரிரண்டு மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே சர்க்கரை நோய்க்கான சிறப்புப் பட்டய வகுப்புகள் உள்ளன. இந்நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கான பட்டயப்படிப்பு தொடங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் அடுத்த ஆண்டில் பட்டயப்படிப்பு தொடங்கப்படும் என்றார் நமச்சிவாயம்.
இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் டி.சாந்தாராம், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்கள் பேராசிரியர் வி.சேஷைய்யா, டாக்டர் வி. மோகன், டாக்டர் வி.விஜய், துறைத் தலைவர் டாக்டர் ஏ.சண்முகம், உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ், துணை முதல்வர் செல்வி, துணை கண்காணிப்பாளர் டாக்டர் தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!