கலப்படம், போலியான உணவுப் பண்டங்கள் குறித்து மாணவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார் மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.

கன்னியாகுமரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா நாகர்கோவில் டதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு, தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடேநேர பேசியது: பொதுமக்கள் பொருள்கள் வாங்கும்போது, கலப்படம், பொருள்களின் காலாவதி தேதி போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.
மாணவர்கள் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து அறிந்து கொள்வதுடன் விழிப்பாக செயல்பட்டு, பெற்றோர், உறவினர், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். கடைகளில் மருந்துகளை வாங்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.
உணவுப்பாதுகாப்புத்துறையினர் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு கெட்டுப்போன, காலாவதியான பண்டங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலியான சுகாதாரம் இல்லாத  உணவுப்பண்டங்கள், போலியான தேயிலை தயாரிப்பது குறித்து அறிந்தால் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
இதையொட்டி நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, மற்றும் ஓவியப் போட்டிகளில்  வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி முன்னிலை வகித்தார். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் எம்.தாமஸ், மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மு.கருணாகரன், முன்னாள் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் டி.சகிலகுமாரி, நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலர் டி. சிதம்பரம்பிள்ளை உள்பட பலர் பேசினர்.
மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அபுல்காசிம் வரவேற்றார்.  நேர்முக உதவியாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

error: Content is protected !!