ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில், தரமான ஆய்வு இதழ் பட்டியலைக் கொண்ட கேர் (கல்வி மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கான கூட்டமைப்பு) அமைப்பை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) உருவாக்கியுள்ளது.
ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடும் மாணவர்கள், பேராசிரியர்கள் தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு இதழ்களில் வெளியிட்டு, அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வேளாண்மை, உயிரி மருத்துவ அறிவியல் போன்ற துறைகளைச் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட ஸ்கோபஸ், வெப் ஆப் சயின்ஸ் போன்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கக்கூடிய ஆய்வு இதழ்கள் உள்ளன.
அதுபோல, சமூக அறிவியல், மானுடவியல், மொழி, கலை, கலாசாரம் போன்ற துறை ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவும் தரமான ஆய்விதழ் பட்டியல் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியை யுஜிசி மேற்கொண்டது.
அதன்படி, கேர் என்ற அமைப்பை யுஜிசி தற்போது உருவாக்கி நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.
மேலும், இந்த அமைப்பில் புதிதாக இணைய விரும்பும் ஆய்வு இதழ் குறித்து ஆய்வு நடத்தும் மையத்தை புணேயில் உள்ள சாவித்ரிபாய் புலே புணே பல்கலைக்கழகத்தில் யுஜிசி அமைத்துள்ளது. கூடுதலாக, நான்கு பல்கலைக்கழகங்களில் மண்டல அளவிலான ஆய்வு இதழ் ஆய்வு மையங்களையும் அமைத்துள்ளது. புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வடக்கு மண்டல மையமும், வதோதராவில் உள்ள பரோடா மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் மேற்கு மண்டல மையத்தையும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தென் மண்டல மையத்தையும், அஸ்ஸாம் தேஜ்பூர் பல்கலைக்கழகத்தில் கிழக்கு மண்டல மையத்தையும் யுஜிசி அமைத்துள்ளது.
கேர் அமைப்பில் புதிதாக ஆய்வு இதழை சேர்க்க விரும்பும் அமைப்புகள், அதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மண்டல மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் யுஜிசி
அறிவித்துள்ளது.

error: Content is protected !!