“குழந்தைகள் மீது பெற்றோர் தங்கள் கனவுகளைத் திணிக்கக் கூடாது’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாணவர்களின் “மதிப்பெண்கள் மட்டுமே அவர்களது வாழ்க்கைக்கான ஒரே வழி என்று கருதக் கூடாது’ என்றும் அவர் கூறியுள்ளார்.
10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தினார். தில்லி, தல்கதோரா அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல…: நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
தங்களால் அடைய முடியாத லட்சியங்களையும், கனவுகளையும் தங்கள் பிள்ளைகள் எட்டவேண்டுமென பெற்றோர்கள் செயல்படக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு திறமைகளும், ஆர்வங்களும் இருக்கும். ஒவ்வொரு குழந்தையிடமும் உள்ள தனித்திறமையை கண்டறிந்து அவற்றை வளர்ப்பது அவசியம். மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையில் உயர ஒரே வழி என்று கருதி, அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு நெருக்கடி அளிப்பது தேவையற்றது.
ஒரு மாணவர் 60 சதவீத மதிப்பெண் எடுக்கிறார் என்றால், அவரை 70 அல்லது 80 சதவீத மதிப்பெண் எடுக்க ஊக்கப்படுத்தலாம். அதைவிடுத்து 90 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறி திட்டுவது மாணவர்களின் உற்சாகத்தை குறைக்கவே செய்யும். அவர்களது தன்னம்பிக்கை குறைந்து, மதிப்பெண்கள் மேலும் குறையவே வழி வகுக்கும்.
சவால்களே சுவாரசியம்: கற்றுக் கொள்வது என்பது தேர்வுகளுக்காக மட்டும் என்ற அளவில் முடங்கிவிடக் கூடாது. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் நமது கல்வி இருக்க வேண்டும். ஒருவர் நமக்கு சவாலாக இருக்கிறார் என்றால், அவர் நம்மை மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவுகிறார் என்பதுதான் எனது நம்பிக்கை. இந்த உலகில் நமக்கு சோதனைகள் என்று எதுவும் இல்லை. அனைத்துமே நமது சுயமதிப்பீட்டை உயர்த்திக் கொள்ள உதவும் வாய்ப்புகள்தான். தேர்வுகளையும் மாணவர்கள் அவ்வாறே எதிர்கொள்ள வேண்டும். சவால்கள் இருக்கும்போதுதான் வாழ்க்கையும் சுவாரசியமிக்கதாக அமையும் என்றார் மோடி.
இலக்கை நோக்கி…: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெய்பிரீத் சிங் என்ற மாணவர், “மாணவர்கள் எவ்வாறு தொடர்ந்து தங்களை ஊக்கப்படுத்திக் கொள்வது? எப்படி மாணவர்கள் தங்களை திருப்திகரமாக உணர்வது?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, “மாணவர்கள் தாங்கள் முன்பு எழுதிய தேர்வு மதிப்பெண்களைவிட அடுத்து வரும் தேர்வில் கூடுதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொள்ள வேண்டும். நீங்கள் மட்டுமே உங்களுக்கு போட்டியாளராக இருக்க வேண்டும். மற்றவர்களை போட்டியாளர்களாக நினைக்க வேண்டும். உங்கள் சாதனைகளை நீங்களே முறியடிக்க முயலுங்கள். அதுவே உத்வேகம் அளிக்கும். தேர்வுகள் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. ஆனால், அது மனஅழுத்தம் அளிப்பதாக மாறிவிடக் கூடாது. மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் இலக்குகளை பெரிதாகக் கொள்ள வேண்டும். அதற்காக தேவையற்ற நெருக்கடிகளை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடாது.
சிகரத்தை எட்டலாம்: நாம் அனைவரும் முதலில் நமக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நமது இலக்கை நோக்கிப் பயணிக்கிறோமா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும். பெரிய இலக்குகளை அடைய, முதலில் குறிப்பிட்ட காலத்தில் எட்ட வேண்டிய சிறிய இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் சிறிய இலக்குகளை எட்டி பழக வேண்டும். சிறிய பாறைகளில் படிப்படியாக ஏறுபவர்கள்தான் இறுதியாக சிகரத்தை எட்டுகிறார்கள்’ என்றார் மோடி.
விளையாட்டும் முக்கியம்: தொடர்ந்து நவீன தொழில்நுட்பங்கள் குறித்துப் பேசிய அவர், “அண்மைக் காலத்தில் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துவிட்டது. கல்வியிலும், பொழுதுபோக்கிலும் நவீன தொழில்நுட்பங்களே கோலோச்சுகின்றன. ஆனால், இவை நமது அறிவையும், ஆற்றலையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். மாணவர்கள் மைதானங்களில் சென்று விளையாடுவதை மறந்துவிடக் கூடாது. ஏனெனில் அது உடலுக்கு வலு சேர்ப்பதுடன், மனதுக்கும் உற்சாகம் அளிக்கும்’ என்றார்.
உழைப்பின் ரகசியம்: “ஒருநாளில் எப்படி தொடர்ந்து 17 மணி நேரம் உழைக்கிறீர்கள்? இதற்கான புத்துணர்வு எப்படி கிடைக்கிறது?’ என்று ஒரு மாணவர் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, “நான் மட்டுமல்ல நமது நாட்டில் பலரும் கடுமையான உழைப்பாளிகளாகவே உள்ளனர். நமது நாட்டில் பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காகவும், குடும்பத்தினருக்காகவும் ஓய்வின்றி உழைக்கிறார்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கான பணிகளைச் செய்வதே அவர்களுக்கு புத்துணர்வு அளித்துவிடும். அதுபோல நானும் நாட்டு மக்களை எனது குடும்பத்தினர்களாகவே கருதுகிறேன். அதுவே எனக்குப் புத்துணர்வையும், உற்சாகத்தையும் தருகிறது’ என்று மோடி பதிலளித்தார்.

error: Content is protected !!