நாகர்கோவிலில் பிப்.15இல் புத்தகக் கண்காட்சி தொடங்கவுள்ளது

நாகர்கோவிலில்  புத்தகக் கண்காட்சி இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன்  மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் கூறியது:
கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (ஆஅடஅநஐ) இணைந்து  மாவட்ட  நிர்வாகத்தின் உறுதுணையுடன் நடத்தும், புத்தகக் கண்காட்சி, நாகர்கோவில், அனாதைமடம் மைதானத்தில் பிப். 15 ஆம் தேதி தொடங்குகிறது. இக்கண்காட்சி 25  ஆம் தேதி வரை  10 நாள்கள் நடைபெறுகிறது.
கண்காட்சியில், 100 புத்தகக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன., அதில்  மருத்துவம், பொறியியல், கலை, இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், வரலாறு, பொது அறிவு, போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த புத்தகங்கள் இடம் பெறுகின்றன.  அனைத்து பொதுமக்களும், மாணவ, மாணவிகளும், கல்வியாளர்களும், வணிக நிறுவனத்தினரும், புதிய தொழில்முனைவோர்களும் இக்கண்காட்சிக்கு வந்து பயன்பெற வேண்டும்.
மேலும்,   பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கவியரங்கங்கள் மற்றும் நகைச்சுவை  சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.   கண்காட்சியில்  கலந்து கொள்பவர்களில் தினமும் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் 3 பேருக்கு  புத்தகங்கள் பரிசளிக்கப்படும்.  அனுமதி இலவசம்.   கட்டண அடிப்படையில் உணவு, போக்குவரத்து, நடமாடும் ஏ.டி.எம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.   உலக அளவில் புகழ் பெற்ற பல்வேறு நாடுகளின் திரைப்படங்களும் திரையிடப்படும்  என்றார் அவர்.
கண்காட்சி நடைபெறவுள்ள மைதானத்தில் கால்கோள் நாட்டப்பட்டது. இக்கூட்டத்தில், நாகர்கோவில் சார் ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பவனர்,  நகராட்சி ஆணையர் கே.சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) மாடசாமி சுந்தர்ராஜ்,  மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அலுவலர் கண்ணன், அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் அனில்குமார், குமரி மெட்ரிக் பள்ளித் தாளாளர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!