மாநிலம் முழுவதும் உள்ள 19 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 8) நடைபெற்றது.
அதன்படி, பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மூலமாக மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன. விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 14-ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.  அன்றைய தினத்தில் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால், இம்முறை பிப்ரவரி 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால்,  8-ஆம் தேதியே அதனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசுசார் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மாத்திரைகள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
இதற்கான பணிகளில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி ஊழியர்களும், 58 ஆயிரத்து 358 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 2.26 கோடி குழந்தைகள் மற்றும் சிறாருக்கு அவற்றை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் பெரும்பாலானோருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!