தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் நந்தக்குமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ரா.சுதன் ஆகியோர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
குரூப்-2 தேர்வு வருகிற 11-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 6 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் (ஆண்கள்-2,72,357, பெண்கள்-3,54,136, மூன்றாம் பாலினத்தவர்- 10) எழுத இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 268 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 248 மையங்களில் நடைபெறுகிறது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை கடந்த சில மாதங்களாக வேகமாக வெளியிட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. குரூப்-4 தேர்வுக்காக 31 ஆயிரத்து 424 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு 35 நாட்களில் சரிபார்க்கப்பட்டுள்ளது. இதுவே அவர்களை நேரில் அழைத்து சான்றிதழ் சரிபார்த்து இருந்தால் 157 நாட்கள் ஆகும். கணினி வாயிலாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ததினால் இது குறைந்து இருக்கிறது. இந்த மாதம் இறுதிக்குள் கலந்தாய்வு நடைபெறும்.
2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளுக்கும்(குரூப்-1 தேர்வு தவிர) தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு எப்போது தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம். அதன்படி தான் நடைமுறைப்படுத்தியும் வருகிறோம்.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் தேர்வு தொடர்பான 25 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 20 அறிவிப்புகள் வெளிவர இருக்கின்றன. மார்ச் 2019-க்குள் 17 ஆயிரம் தேர்வர்கள்(குரூப்-4-ல் மட்டும் 11 ஆயிரம் பேர்) தேர்வு செய்யப்பட்டு அரசின் பல்வேறு துறைகளில் எந்த குறைபாடும் இல்லாமல் பணியமர்த்தப்பட உள்ளனர். ஒரு ஆண்டில் இவ்வளவு பேர் பணியமர்த்தப்படுவது இது தான் முதல் முறை.
தேர்வு முடிவுகளை வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017-ம் ஆண்டுக்கான குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இனிவரும் காலங்களில் குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து 2 மாதங்களில் முதல்நிலைத்தேர்வும், அந்த தேர்வு முடிவு அடுத்த 2 மாதங்களிலும், அதில் இருந்து 2 மாதங்களில் முதன்மை எழுத்து தேர்வும், 3 மாதங்களில் அந்த தேர்வு முடிவும், அதையடுத்து 15 நாட்களில் நேர்முகத்தேர்வும் என 10 மாதங்களுக்குள் இறுதி முடிவு வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில வினாத்தாள்களை தமிழில் வடிவமைக்க முடியாததால் தான் ஆங்கிலத்தில் வருகிறது. வெகுவிரைவில் அனைத்து வினாத்தாள்களும் தமிழ், ஆங்கிலம் கலந்து கேட்பதற்கான பணிகள் நடைபெறுகிறது. அது தான் எங்களுடைய இலக்கு. வெளிமாநிலங்களில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்கள் என்று பார்த்தால் 0.5 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதத்துக்குள் தான் இருக்கும்.
அடுத்த ஆண்டுக்கான ஆண்டு திட்டம் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும். அனைத்து அரசு துறைகளிலும் இருந்து தகவல்களும் பெறப்பட்டு வருகின்றன. தேர்வாணைய இணையதளம் பிரச்சினை இல்லாமல் இயங்க புது பதிப்பு(வெர்சன்) மேம்படுத்தப்பட்டு(அப்டேட்) வருகிறது.
தேர்வர்கள் தேர்வு குறித்து அவ்வப்போது தவறாக வரும் செய்திகளையோ, வதந்திகளையோ, இடைத்தரகர்களையோ நம்பவேண்டாம். மேலும் விவரங்களுக்கு தேர்வாணையத்தை நேரிலோ, [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.