அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களால் ஆங்கிலத்தில் சுலபமாக பேச முடியாது என்கிற எண்ணம் பரவலாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் படித்தால்தான் ஆங்கிலத்தில் பேச முடியும் என்கிற எண்ணமும் பெற்றோர்கள் மனதில் இருக்கிறது.
ஆனால், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களாலும் எளிதில் ஆங்கிலத்தில் பேச வைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சந்திரபிள்ளை வலசு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சிவக்குமார். இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் வீடியோக்களையும் பதிவிட்டிருக்கிறார்.
ஆசிரியர் சிவக்குமாரிடம் பேசினோம்.
“ மனப்பாடம் செய்யச் சொல்லி யாரை வேணும்னாலும் ஆங்கிலம் பேச வைக்கலாம். ஆனா, இயற்கையாக மனசில் தோணுகிற விஷயங்களை ஆங்கிலத்தில் பேசணும். என் மாணவர்கள்கிட்ட வந்து நீங்க என்ன டாபிக் சொன்னாலும் ஆன் தி ஸ்பாட்ல பேசுவார்கள். நீங்க சொல்ற டாபிக்கில் ஏதாவது ஒரு லைன் எடுத்து பேசிக்கிட்டே இருப்பான்.
ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுக்கிறதுக்கு நிறைய வழிகள் இருக்கின்றன. தாய்மொழியில் படிக்கிறதுனால ஆங்கிலத்தில் பேசணும், கேள்வி கேட்கணுங்குறதெல்லாம் மாணவர்களுக்கு முடியாத காரியமாகி விடுகிறது. இதுக்கு மாற்றாக ஏதாவது பண்ணனும்னு நினைச்சேன். மொழிக்கு தமிழ், ஆங்கிலம்னு எல்லாம் கிடையாது. செயல், தன்மையைக் குறிக்கின்ற வாக்கியங்கள் தான் மொழியின் அடிப்படை.
இதைப் பயன்படுத்தியே வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளலாம். Tri- Verb Technique – ன்னு ஒரு டெக்னிக்கை உருவாக்கினேன். இதில், Action verb, Have Verb, Be Verb மூன்றிலும் அவனை ஸ்ட்ராங் ஆக்கினேன். அதன் பிறகு, Sociolinguistic approach என்பதை அறிமுகப்படுத்தினேன். இதில், கிராமர் இல்லாமல் ஐந்நூறு வினைச்சொற்களை கற்றுக் கொடுத்தேன்.
ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிஞ்சிக்க வைச்சேன். அதற்குப் பிறகு, வாக்கிய அமைப்பு பற்றி சொல்லிக் கொடுத்தேன். இதெல்லாம் முடிஞ்சதும் பசங்ககிட்ட 10 ஆக்டிவிட்டி கொடுத்தேன். அவ்வளவு தான், அவன் ஒரு மொழியை தெரிஞ்சிகிட்டான். இப்போ, நீங்க எந்த டாபிக் சொன்னாலும், அதுக்கு என் மாணவர் பதில் சொல்வார். இலக்கணப் பிழையோட தான் பேசத் தொடங்குவாங்க. அவர்கள் பேச ஆரம்பிச்சிட்டாலே போதும், நான் கிராமர் சொல்லிக் கொடுத்து அவர்கள் பேசுகின்ற மொழிக்கு உருவம் கொடுத்துவிடுவேன்.
இன்னொன்னு சொல்லியே ஆகணும்.. என்கிட்ட அறிவுசார் குறைபாடுடைய தனுஷ் குமார்னு ஒரு பையன் படிக்கிறார். நான் இந்த முயற்சியை அவர்கிட்ட இருந்துதான் ஆரம்பிச்சேன். இப்போ அவன்கிட்ட நீங்க எந்த கேள்வி கேட்டாலும் அவன் ஆங்கிலத்தில் பதில் சொல்லுவான். அவனுக்கு அப்புறம் தான் மற்ற மாணவர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுத்தேன்” எனச் சொல்லி புன்னகைக்கிறார், ஆசிரியர் சிவக்குமார்